பல்லாவரத்தில் அதிமுகவில் இரு கோஷ்டிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலால் பிரசார வாகனம் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
சென்னை அடுத்த பல்லாவரத்தில் ஸ்ரீபெரும்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பிரேம்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங்குடன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மதனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ராஜப்பா பெண்கள் உட்பட தனது ஆதரவாள்ர்களுடன் வேட்பாளருக்கு வரவேற்பளிக்க கோவிலுக்கு அழைத்து சென்றார்.
undefined
சிறிது நேரம் கழித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங் வேட்பாளருடன் வாகனத்தில் புறப்பட சென்றார். அப்போது ராஜப்பாவை பிரச்சார வாகனத்தில் ஏற்றவில்லை என கூறப்படுகிறது. இதனால் ராஜப்பா ஆதரவாளர்களுக்கும், தன்சிங் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பெண்களை தன்சிங் ஆபாச வார்த்தைகளில் திட்டியதாகவும், இதனால் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம், கைகலப்பும் ஏற்பட்டதில் பிரச்சார வாகனத்தின கண்ணாடி உடைக்கபட்டது.
மேலும் ஆத்திரமடைந்த பெண்கள் தன்சிங் ஒழிக என கோஷமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.