கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட்… அடுத்தடுத்து அச்சுறுத்தும் வானிலை!!

By Narendran SFirst Published Nov 14, 2021, 5:36 PM IST
Highlights

#Redalert | கன்னியாகுமரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் அம்மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் தென்மேற்கு பருவமழை பெய்து முடிந்ததை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியது.  இதன் காரணமாக தற்போது கடந்த சில தினங்களாக அங்கு கனமழை கொட்டி வருகிறது. இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது. அதன்படி அங்கு மழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது. மலையோரம் மற்றும் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் விடிய, விடிய பெய்த மழையால் அனைத்து அணைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கண்காணித்து அதற்கு ஏற்ப அணையிலிருந்து கூடுதலாக தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆறு மற்றும் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோதையாறு, வள்ளியாறு, குழித்துறை தாமிரபரணியாறு, பரளியாறு, பழையாறு என்று அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஆற்று வெள்ளம் அதிகரித்ததாலும், மழை நிற்காததாலும் 150 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் சிக்கியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். குறிப்பாக இறச்சகுளம், பூதப்பாண்டி, நாவல்காடு, நங்காண்டி, அருமநல்லூர், தெரிசனங்கோப்பு, வீரவநல்லூர், புரவசேரி, ஈசாந்திமங்கலம், செண்பகராமன்புதூர், திருப்பதிசாரம் , சுசீந்திரம், கற்காடு, தேரூர், காட்டுப்புதூர், தேரேகால்புதூர், நாகர்கோவில் புத்தேரி, சக்திகார்டன், ஊட்டுவாழ் மடம், ரெயிவே காலனி, தோவாளை, ஆரல்வாய்மொழி உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள திருவட்டார், குலசேகரம், அருமனை, களியல், பளுகல், முன்சிறை, நித்திரவிளை, கொல்லங்கோடு, குழித்துறையில் ஒரு பகுதி, திக்குறிச்சி, குளச்சல், குருந்தன்கோடு, தேங்காப்பட்டணம், வைக்கல்லூர், பார்த்திபபுரம், மங்காடு, பள்ளிக்கல் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை காரணமாக குமரி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கன்னியாகுமரியில் இன்றும் மழை மழை விட்டு பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஒருசில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் இதனால் அம்மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கன்னியாகுமரியில் சரல்விளை, சண்முகபுரம், முஞ்சிறை, செண்பகராமன்புதூர், சென்னித்தோட்டம், குழித்துறை, லாயவிளக்கு, பேயன்குழி, தடிக்காரன்கோணம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ள நிலையில் இந்த அதிகனமழை எச்சரிக்கை மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ளம் காரணமாக அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே,  மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்  நாளை கன்னியாகுமரி செல்கிறார்.

click me!