நேர்காணல் நடத்தி நியாயவிலைக்கடைக்கு 4000 பேர் நியமனமா.? டிஎன்பிஎஸ்சி மூலமாகவே தேர்ந்தெடுக்க வேண்டும்- ராமதாஸ்

By Ajmal KhanFirst Published Sep 29, 2022, 11:58 AM IST
Highlights

 போட்டித்தேர்வு நடத்தாமல் நேர்காணல் நடத்துவது முறையல்ல. அதிலும் மாவட்ட அளவில் நேர்காணல் நடத்துவதால், தகுதியும், திறமையும் உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டு, அதிகார வர்க்கத்திற்கு நெருக்கமானோர் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 நியாயவிலைக்கடைக்கு ஆட்கள் தேர்வு

டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக நியாயவிலைக்கடைக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிகளுக்கு 4,000 பேரை நியமிக்க தமிழக அரசின் கூட்டுறவுத் துறை முடிவு செய்திருக்கிறது. இந்த பணியிடங்கள் அனைத்தும் மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் என்ற  அமைப்பின் மூலம் மாவட்ட அளவில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது,

இந்த நியமனங்கள் சரியாக நடக்குமா? என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பொது வினியோகத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு சங்கங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் 25,044 முழு நேர நியாயவிலைக் கடைகள் 10,279 பகுதிநேர நியாயவிலைக்கடைகள் என 35,323 நியாயவிலைக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்கள்  ஏராளமாக காலியாக இருக்கும் நிலையில், அவற்றில் 4000 பணியிடங்களை நேர்காணல் மூலம் நிரப்ப கூட்டுறவுத் துறை தீர்மானித்திருக்கிறது. 

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தமிழகத்தில் தடை..! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

நேர்காணல் மூலம் நியமனம்

இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அக்டோபர் 13-ஆம் தேதி வெளியிட்டு, நவம்பர் 14-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்று, திசம்பர் 15 முதல் 30-ஆம் தேதி வரை நேர்காணல்களை நடத்தி ஆட்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களுக்கு அவற்றின் பதிவாளர் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். நியாயவிலைக்கடை விற்பனையாளர், கட்டுனர் பணிகளுக்கு போட்டித் தேர்வு நடத்தாமல், வெறும் நேர்காணலை மட்டும் நடத்தி ஆட்களை தேர்வு செய்வது ஐயத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்காது. கடந்த சில ஆண்டுகளுக்கு  முன்புவரை  நியாயவிலைக் கடைப்பணியாளர்கள் வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு வந்தனர்.  

ஆனால், வேலைவாய்ப்பக பதிவின் அடிப்படையில் மட்டும் பணி நியமனங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும், ஆள்தேர்வு குறித்து பொது அறிவிப்பு வெளியிட்டு வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்யாதவர்களிடமிருந்தும் விண்ணப்பங்களைப் பெற்று  தான் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், இரு தரப்புக்கும் வாய்ப்பளிக்க வேண்டியுள்ளது. இரு தரப்பினரின் தகுதி மற்றும் திறமைகளை அளவிடுவதற்கு போட்டித் தேர்வு தான் சரியானதாக இருக்குமே தவிர, நேர்காணல் சரியான முறையாக இருக்காது.

PFIக்கு தடை எதிர்பார்த்த ஒன்று தான்...! - ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங்தள் அமைப்பிற்கு தடை எப்போது..? திருமாவளவன்

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கும் கூடுதலான கல்வித் தகுதி கொண்ட அனைத்துப் பணிகளுக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வு நடத்தி, அதில் ஒவ்வொருவரும் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் தான் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பத்தாம் வகுப்பு தகுதி கொண்ட பணிகளுக்கே போட்டித் தேர்வு மூலம் தான் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் எனும் போது, 12-ஆம் வகுப்புத் தகுதி கொண்ட விற்பனையாளர் பணிக்கும், பத்தாம் வகுப்பு தகுதி கொண்ட கட்டுனர் பணிக்கும் போட்டித்தேர்வு நடத்தாமல் நேர்காணல் நடத்துவது முறையல்ல. அதிலும் மாவட்ட அளவில் நேர்காணல் நடத்துவதால், தகுதியும், திறமையும் உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டு, அதிகார வர்க்கத்திற்கு நெருக்கமானோர் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இது பெரும் சமூக அநீதி. இந்த அநீதி தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

சமூக அநீதி- ராமதாஸ்

கடந்த 2017-ஆம் ஆண்டில், அப்போதைய அதிமுக ஆட்சியின் போது நியாயவிலைக்கடை ஊழியர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்க முயற்சிகள் நடந்த போது அதை பா.ம.க. கடுமையாக எதிர்த்தது. ஒரு கட்டத்தில் அந்த ஆள் தேர்வு கைவிடப்பட்டது. இப்போது நீண்ட காலத்திற்கு பிறகு நியாயவிலைக் கடை விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான நடைமுறை ஐயத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தால் தான் ஏழை இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதைக் கருத்தில் கொண்டு, நியாயவிலைக் கடை பணியாளர்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் நேர்காணலின் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். சமவாய்ப்பையும், சமூகநீதியையும் உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியாயவிலைக் கடை பணியாளர்களை தேர்ந்தெடுக்கவும் தமிழக அரசு ஆணையிட வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

பொள்ளாட்சியில் 16 இடங்களில் குண்டு வீசுவோம்..! காவல்நிலையத்திற்கு வந்த கடிதத்தால் பரபரப்பு

 

click me!