
காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தாய், மகள் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஓரிக்கை பேராசிரியர் நகரை சேர்ந்தவர் பழனி. சென்னை தலைமை செயலகத்தில் நிதி துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வித்யா (40). இரட்டை குழந்தைகள் பூர்ணிமா, பூர்விகா (4). இவர்கள், உறவினர் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சிக்காக இருசக்கர வாகனத்தில் மனைவி வித்யா, குழந்தைகள் பூர்ணிமா, பூர்விகா ஆகியோருடன் பழனி உத்திரமேரூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
இதையும் படிங்க;- கால் இல்லாதவனுக்கு காதல் திருமணமா? பெண்ணின் பெற்றோர் ஆவேசம்
அப்போது, ஓரிக்கை காந்தி நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரில் அதிவேகமாக வந்த கல்குவாரி டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், வித்யா மற்றும் பூர்ணிமா ஆகியோரின் தலை மீது லாரி சக்கரம் ஏறியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த பழனி மற்றும் மற்றொரு மகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். கணவர் கண்முன்னே மனைவி, குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- 115 சாதியினரை வஞ்சித்து ஒரே சாதிக்கு 10.5 சதவீதம் அளித்த எடப்பாடியே வராதீர்! மதுரையில் கண்டன போஸ்டர் பரபரப்பு