தமிழகத்தில் அக்டோபர் 2ம் தேதி நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு திருச்சி, வேலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ம் தேதி நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு மறுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு காவல்துறையிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. அணிவகுப்பு நடத்துவதற்கான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது. அதில், அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்கும் எவரும் சாதி, மதம் பற்றி தவறாக பேசக் கூடாது. காயத்தை ஏற்படுத்தக்கூடிய கம்பு, லத்தி அல்லது ஆயுதம் எதையும் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- ஆர்எஸ்எஸ் பேரணியையே அலறவிடப் போகும் திருமாவளவன்.. அக்டோபர் 2க்கு மாஸ் பிளான்.. இத்தனை கட்சியா.??
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பல்வேறு கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை திரும்பப் பெறக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது, அதற்கு தனி நீதிபதி இளந்திரையன் மறுப்பு தெரிவித்து விட்டார்.
பின்னர் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு முன்பு விடுதலை சிறுத்தைகள் சார்பில் முறையிடப்பட்டது. இம்முறையீட்டை கேட்ட பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு வழக்கில் ஒரு தரப்பாக விசிக இல்லாத நிலையில் தனி நீதிபதி உத்தரவை திரும்பப் பெறக் கோரி மனுத்தாக்கல் செய்ய முடியாது என்றும், இதற்கு மேல்முறையீடு தான் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கும், சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மத உணர்வுகளை தூண்டும் பல நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடக்கும் சூழலில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எந்த அமைப்புகளின் ஊர்வலம், கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது என தமிழக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் குறித்த வழக்கில் விண்ணப்பத்தை பரிசீலித்து உரிய முடிவுகள் எடுக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
இதையும் படிங்க;- சமூக நலன் கொண்ட அமைப்பு PFI.. ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தகுதி இருக்கா? கொந்தளித்த வைகோ