திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர் ஒருவர் தவற விட்ட பணப்பையை பிரசாத விற்பனை நிலைய உரிமையாளர் பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், கடை உரிமையாளரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின் முருகனை வழிபட்டு செல்வர். இந்தநிலையில் முருகனை தரிசனம் செய்த பின்னர் பக்தர்கள் கோயில் வளாகத்தில் இருக்கும் பிரசாத கடையில் விற்கப்படும் கோவில் பிரசாதத்தை வாங்கிய பின்னர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.
அதுபோல் சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த செந்தில் - சத்யா தம்பதியர் தனது குடும்பத்துடன் கடந்த அண்மையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அப்போது பிரசாதம் வாங்கிவிட்டு தவறுதலாக பர்சினை கடையிலேயே விட்டுவிட்டார். பின்னர் தனது பர்ஸ் காணாமல் போனதை அறிந்ததும் பல இடங்களிலும் தேடியுள்ளார்.
எங்கு தேடியும் பர்ஸ் கிடைக்காத நிலையில் தான் கொண்டு வந்த பர்ஸ் தொலைந்தே போய் விட்டது என்று எண்ணி கொண்டிருந்த போது திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் இருந்து வந்த அழைப்பின் பேரில் சத்யா தொலைத்த பர்ஸ்சானது திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் இருப்பதாகவும் அந்த பர்ஸை பிரசாத கடை உரிமையாளர் மாரிமுத்து தனது கடையில் பக்தர் ஒருவர் தவற விட்டு விட்டதாகவும் கூறி ஒப்படைத்து உள்ளார்.
பர்ஸில் ஆதார் கார்டு மற்றும் ரூபாய் 8 ஆயிரம் ரொக்க பணமும் இருந்ததாகவும் அதனை உடனே பெற்று கொள்ள வருமாறும் உதவி காவல் ஆய்வாளர் கல்யாண சண்முக சுந்தரம் கூறியுள்ளார் . அதன் படி சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வந்த செந்தில் - சத்யா தம்பதியர் தவறவிட்ட பர்ஸ்ஸும் அதில் இருந்த ஆதார் கார்டு மற்றும் 8 ஆயிரம் ரூபாயும் கடை உரிமையாளர் மாரி முத்து கரங்களால் காவல் துறை முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகள் மீது கடை உரிமையாளர் தாக்குதல் - தூத்துக்குடியில் பரபரப்பு
தவறுதலாக கடையில் தவறவிட்ட பக்தரின் பர்ஸினை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த கடை உரிமையாளர் மாரிமுத்துவை காவல் துறையினர் வெகுவாக பாராட்டினர் .மேலும் தவறவிட்ட பர்ஸை பெற்றுக்கொண்ட செந்தில், சத்யா தம்பதியினர் கடை உரிமையாளர் மாரி முத்துவின் நேர்மை மிகுந்த செயலை மனதார வாழ்த்தி தனது நன்றியை தெரிவித்து விட்டு சென்றனர்.
கையில் கிடைத்த பணத்தை தொலைத்தவரிடம் ஒப்படைக்காமல் தானே வைத்துக்கொள்ள கூடிய காலத்தில் நேர்மையாக தொலைத்தவரிடம் நேர்மையாக ஒப்படைக்க எண்ணிய மாரி முத்துவின் நல்ல செயலை கண்ட திருச்செந்தூர் பகுதி பொதுமக்களும், பக்தர்களும் மனதார பாராட்டினார்கள்.