துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் பயிற்சி அளிக்கும் ஆர்எஸ்எஸ், சங்பரிவார்..? தடை விதிக்காதது ஏன்? டிஎன்டிஜே கேள்வி

By Ajmal KhanFirst Published Sep 29, 2022, 7:37 AM IST
Highlights

பல மாநிலங்களில் ஊர்வலம் எனும் பெயரில் மத மோதல்களை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள், இவ்வளவு பயங்கரவாத பின்புலம் கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு இதுவரை ஏன் தடை விதிக்கப்படவில்லை.? என தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் கேள்வி எழுப்பியுள்ளது.

தீவிரவாதத்தை பரப்பும் ஆர்எஸ்எஸ்

நாடு முழுவதும் தீவிரவாத சித்தாந்தத்தை பரப்பும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் கோரிக்கைவிடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய பாஜக அரசு பிஎப்ஐ உள்ளிட்ட சில அமைப்புகளை தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மைக்கு தீங்கு விளைவிப்பதாகவும் பொது அமைதி மற்றும் மத மோதல்களை அவ்வியக்கங்கள் உருவாக்குவதாகவும் உள்துறை அமைச்சகம் காரணம் கூறியுள்ளது. மேற்படி காரணங்களால் இந்தியாவில் தடை செய்யப்படுவதற்கு அதிக தகுதியுள்ள அமைப்பு ஆர்.எஸ்.எஸ் எனும் பயங்கரவாத அமைப்பு தான், இளைஞர்கள் மத்தியில் ஷாகா பயிற்சி என்ற பெயரில் இந்தியா முழுக்க தீவிரவாத சிந்தனையை பரப்பி வருகிறார்கள். மக்களிடையே மத வெறுப்பு சிந்தனையை ஊட்டி இந்தியாவை துண்டாடும் வேலையில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். காந்தியின் கொலையிலும் அதன் பிறகு நாட்டில் நடைபெற்ற வன்முறையில் உள்ள தொடர்பினால் ஆர்எஸ்எஸ் இயக்கம் ஏற்கனவே தடை செய்யப்பட்டது. அதன் பிறகு காலப்போக்கில் ஆர்எஸ்எஸ் மீதான தடை நீக்கப்பட்டது. எனினும் வன்முறைப் பாதையை விட்டு அந்த அமைப்பு விலகவில்லை. 

ஆர்எஸ்எஸ்க்கு தடை விதிக்காதது ஏன்..?

இந்திய அளவில் பல குண்டு வெடிப்புகளில் நேரடியாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பங்காற்றியுள்ளது என்று ஆர்.எஸ்.எஸ்.எஸில் 1990 முதல் அங்கம் வகித்த யஷ்வந்த் ஷிண்டே சமீபத்தில் மஹாராஷ்ட்ரா நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலமே அளித்துள்ளார். 2000 ம் ஆண்டு நடந்த சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, 2008 ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களை ஆர்.எஸ்.எஸ் நடத்தியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இவையாவும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த விஷயம் தான். அது மட்டுமின்றி இன்றளவும் பல மாநிலங்களில் ஊர்வலம் எனும் பெயரில் மத மோதல்களை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள், இவ்வளவு பயங்கரவாத பின்புலம் கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு இதுவரை ஏன் தடை விதிக்கப்படவில்லை.? துப்பாக்கிகளை வைத்து பயிற்சி அளிப்பது, கத்தி, வாள் போன்றவற்றைக் கொண்டு வெளிப்படையாகவே ஆயுதப்பயிற்சிகளில் சங்பரிவார் அமைப்புகள் ஈடுபடுகின்றனர்.

சங்கரிவார் தடை செய்ய வேண்டும்

இவை அனைத்திற்குமான புகைப்படக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் காணக்கிடக்கின்றன,இத்தகைய சங்பரிவார அமைப்புகளுக்கு ஏன் தடையில்லை.இந்திய அரசியல் சாசனத்தை அகற்றி இந்து ராஷ்ட்ராவின் அரசியல் சாசனத்தை வடிவமைக்க வேண்டும் என்று சங்பரிவாரத்தினர் குரல் கொடுத்தார்களே? இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய இந்த அமைப்பு மீது தடை விதிக்கப்படாதது ஏன்? நாட்டை வன்முறைப் பாதையை நோக்கி அழைத்து செல்லும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளை சுதந்திரமாக உலவ விட்டு விட்டு சிறுபான்மை அமைப்புகளை மட்டும் குறி வைப்பது சிறுபான்மை சமூகத்தை நசுக்கும் செயலாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது. எனவே நாட்டின் இறையாண்மைக்கு கேடு விளைவிக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார அமைப்புகளை முதலில் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பின் பொதுச்செயலாளர் அப்துல் கரீம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

சமூக நலன் கொண்ட அமைப்பு PFI.. ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தகுதி இருக்கா? கொந்தளித்த வைகோ

 

click me!