அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக திமுக கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அதிமுக எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அமித்ஷாவை கண்டிக்காதது சனாதன சக்திகளுக்கு துணைபோவது போல உள்ளது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
அம்பேத்கர்- போராடும் அரசியல் கட்சிகள்
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது அம்பேத்கர் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறி நாடு முழவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் சாலை மறியல் போராட்டம், ரயில் மறியல் போராட்டமும் தொடர்கிறது. பாராளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சிகள் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் திமுகவும் களத்தில் இறங்கியுள்ளது. ஆனால் அதிமுக சார்பாக எந்த வித எதிர்ப்பு குரலும் கொடுக்கவில்லை. இது தொடர்பாக தமிழக அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
undefined
அமித்ஷாவிற்கு எதிராக போராட்டம்
அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித்ஷாவை கண்டித்து நாடே கொந்தளித்துக் கிடக்கிறது. முதலமைச்சர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இன்று நாடு தழுவிய போராட்டத்தில் திமுகவும் பங்கெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி தமிழ்நாடு முழுக்க திராவிட முன்னேற்ற கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகிறது. நாடாளுமன்ற வளாகத்திலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறார்கள். சட்டமேதை, சமத்துவப் போராளி அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்த முயலும் சனாதன சக்திகளுக்கு துணைபோகும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய் மூடிக்கிடக்கிறார்.
அமைதி காக்கும் அதிமுக
ஒன்றிய பாஜக அரசு மக்களாட்சியை அழிக்க கொண்டுவரத் துடிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி எதுவும் கூறாமல் அமைதி, இஸ்லாமிய சமூக மக்களை இழிவாக பேசிய நீதிபதி விவகாரத்திலும் அமைதி, அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்க கூட வேண்டாம் "வலிக்காமல் வலியுறுத்த" கூட மனமில்லாமல் அமைதி….அமைதியோ அமைதி என ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி. யார் கண்ணில் படாமல் பதுங்கு குழியில் பதுங்கி கொண்டிருக்கும் பழனிசாமியைக் கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள் அண்ணல் அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா என்று அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.