
கூடலூர் மக்களை மிரட்டும் புல்லட் யானை
கூடலூர் பகுதியில் மக்களை கடந்த சில மாதங்களாக அச்சுறுத்தி வரும் யானைக்கு அப்பகுதி மக்கள் புல்லட் யானை என பெயர் சூட்டியுள்ளனர். உணவை தேடி வரும் அந்த யானை வீடுகளை உடைத்து வீடுகளில் இருக்கும் பொருட்களை சாப்பிட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். வீடுகள் சேதமடைவதோடு உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை இருப்பதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இந்த புல்லட் யானையை பிடித்து வேறு பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வனத்துறை அமைச்சர் பொன்முடி கூறுகூயில், கூடலூர் வனக்கோட்டம், சேரம்பாடி மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆண் காட்டுயானை ஒன்று, பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் தொடர்ந்து நடமாடி வருகிறது. இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், வனநிலத்தை ஒட்டியுள்ள தங்களது விவசாய நிலங்களில் பயிரிடும் வாழை, பாக்கு, தென்னை, மரவள்ளிக்கிழங்கு போன்ற உணவு வகைகளைத் தேடி யானைகள் ஊருக்குள் நுழைவதால், மனித விலங்கு மோதல்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டாகின்றன.
யானையை காட்டுக்குள் அனுப்ப திட்டம்
பொதுமக்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு கூடலூர் வனத்துறை இந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் அனுப்ப கீழ்க்காணும் சிறப்பு நடவடிக்கைகளை இரவு பகலாக தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. கூடலூர் வனக்கோட்டத்தைச் சார்ந்த அனைத்து முன் களப்பணியாளர்களும், அதிவிரைவுப் படை. யானை விரட்டும் காவலர்கள் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் என சுமார் 75 பணியாளர்கள் 24 மணி நேரமும் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
வனத்துறை நடவடிக்கை என்ன.?
வனத்துறை எந்நேரமும் பொது மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவும், விவசாய பயிர்களை பாதுகாப்பதற்காகவும், யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் திரும்ப அனுப்புவதற்கும் இரவு பகலாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. எனவே, சேரம்பாடி மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள பொது மக்கள் வனத்துறைக்கு தங்களது ஒத்துழைப்பினை முழுமையாக வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.