அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கௌதம் என்பவரின் மனைவி குறிஞ்சிமலர் என்ற பெண் வால்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்த தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் குறிஞ்சிமலருக்கு செவ்வாய் இரவு 8 மணியளவில் பெண் குழந்தை பிறந்தது.
இரவு 10.30 மணியளவில் குறிஞ்சிமலரின் உடல்நிலை மோசமடைந்ததால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வால்பாறையில் இருந்து 64 கிமீ ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க : கொரோனா பாதிப்பால் கோவையில் 65 வயது முதியவர் பலி.. தமிழகத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..?
இந்த நிலையில் மருத்துவ அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து அவரது மாமா பி.கலைமணி கூறுகையில், " குறிஞ்சிமலருக்கு சுகப்பிரசவம் ஆன நிலையில் தாய், சேய் இருவரும் நலமாக இருந்தனர். ஆனால் பிரசவத்தின் போது அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. மேலும், சிகிச்சையின் போது டாக்டர் இல்லை. செவிலியர்கள் மட்டுமே பிரசவம் பார்த்தனர். அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, பொள்ளாச்சிக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் இருந்திருந்தால், உயிரை காப்பாற்றியிருக்கலாம். ஜெனரேட்டர் செயலிழந்ததே, உயிரிழப்புக்கு காரணம்.” என்று தெரிவித்தார்.
இது குறித்து உயிரிழந்த பெண்ணின் தாயார் சாந்தி கூறுகையில், " மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது செவிலியர்கள் செல்போன் டார்ச் மூலம் சிகிச்சை அளிப்பதை நான் பார்த்தேன். ஆம்புலன்ஸ் ஆழியாரை வந்தடைந்தபோது எனது மகள் சுயநினைவை இழந்தாள்" என்றார்.
எனினும் இந்த குற்றச்சாட்டுகளை மாவட்ட சுகாதாரத்துறை மறுத்துள்ளது. இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் சந்திரா பேசிய போது “ வால்பாறை அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தினேன். மருத்துவ அலட்சியம் இல்லை. ஜெனரேட்டரும் போதிய எரிபொருளுடன் இயங்கும் நிலையில் உள்ளது. அப்போது பணியில் இருந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அந்த பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை அறிக்கை தயார் செய்து, இன்று மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும்..” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்.. பீதியில் உறைந்த மக்கள்..