Pongal Gift: தரமற்ற பொங்கல் தொகுப்பு..முறைகேடு புகார்..மூத்த அதிகாரி பணியிடைநீக்கம்..

By Thanalakshmi VFirst Published Jan 27, 2022, 4:50 PM IST
Highlights

பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாடு மேலாளர் பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
 

இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்காகத் தமிழக அரசு சார்பில் 1,300 கோடி நிதி ஒதுக்கீட்டில் பச்சரிசி, வெள்ளம், கரும்பு உள்ளிட்ட 21 பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டை தார்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ஆனால் மக்களுக்கு வழங்கிய தொகுப்பில் பொருட்கள் தரமற்ற வகையில் இருந்ததாகவும் , சில இடங்களில் 21 க்கும் குறைவாகே பொருட்கள் இருந்ததாகவும் புகார்கள் எழுந்தன. மேலும் சில பகுதிகளில் வழங்கப்பட்ட பரிசு தொகுப்பில் வெல்லம், ஒழுகிய நிலையில் தரமற்றதாக இருந்ததாகவும் புளியில் பல்லி, மிளகில் கலப்படம் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி சார்பில் பொதுமக்களுக்கு தரமான பரிசு தொகுப்பு வழங்கப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகள் நியாய விலை கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இப்படி ஆரம்பம் முதலே பொங்கல் பரிசின் மீதான விமர்சனங்களும் அதற்கு விளக்கங்களும் வந்தபடியே இருந்தன.அடுத்தப்படியாக பொங்கல் பரிசுத் தொகுப்பிற்காக ஒதுக்கப்பட்டிருந்த 1300 கோடி நிதியில் முறைகேடாக 500 கோடி ஊழல் நடந்திருப்பதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் செய்ததாகவும், தரமற்ற பொருள் வழங்கியதாகவும்  ஈபிஎஸ் கூறுவது அப்பட்டமான பொய் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி  பதிலடி கொடுத்தார்.

இப்படியான சூழலில் பொங்கல் பரிசுத்தொகுப்பு முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு விநியோகத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.இந்நிலையில் தான் பொங்கல் பரிசுத்தொகுப்பில் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாடு மேலாளர் பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்புக்கான பொருட்களின் தரத்தை உறுதிபடுத்துவதில் மெத்தனமாக செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அதே போல் இனிவரும் காலங்களில் நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விரிவான வழிக்காட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சில இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களின் தரம் குறித்து வந்ததை தொடர்ந்து விரிவான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

click me!