நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ரோட் ஷோவில் கலந்து கொள்ளும் அவர், நாளை வேலூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
தமிழகத்தில் மீண்டும் மோடி
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் வாக்குப்பதிவிற்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் முதல் வேட்பாளர்கள் வரை கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர், மத்திய அமைச்சர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் பிரதமர் மோடியும் தனது இன்று தமிழகம் வரவுள்ளார். 2 நாள் பயணமாக இன்று மாலை சென்னை வரும் பிரதமர் மோடி, பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை சாலை பேரணியில் பங்கேற்று, பாஜக வேட்பாளர்களுக்கு வாக்குசேகரிக்க உள்ளார்.
சென்னையில் ரோட் ஷோ
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் சென்னைக்கு மாலை 6:30 மணிக்கு வருகிறார். சென்னை பாண்டி பஜாரில் நடைபெறும் ரோட் ஷோவில் பங்கேற்று பாஜக சார்பாக சென்னையில் போட்டியிடும் தென் சென்னை தொகுதி வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வம், வட சென்னை வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார். தியாகராய நகர் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை சாலை பேரணியில் பங்கேற்று, பாஜக வேட்பாளர்களுக்கு வாக்குசேகரிக்க உள்ளார்.இதற்காக பேரணி நடைபெறும் தியாகராய நகர் சாலை, வெங்கட நாராயண சாலை, ஜி.என்.செட்டி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
வேலூர், மேட்டுப்பாளையம் பொதுக்கூட்டம்
பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாஜக நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். வழி நெடுகிலும் மேடைகள் அமைத்து கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் பேரணி நடைபெறும் பகுதியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் சென்னை முழுவதும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ரோட் ஷோவை முடித்துக் கொண்டு இன்று இரவு கிண்டி ராஜ் பவனின் தங்குகிறார். நாளை காலை ஹெலிகாப்டர் மூலம் வேலூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
இதையும் படியுங்கள்
Chennai Traffic Change: பிரதமர் மோடி வருகையால் சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!