ஒரே ஒரு தீக்குச்சி! ஒரே ஒரு பிளேடு! ஏ.டி.எம்மில் இருந்து லட்சம் லட்சமாக சுருட்டிய பலே கில்லாடிகள்!

First Published Jul 3, 2018, 5:30 PM IST
Highlights
Only one fire! Only one blade! Many millions of people from ATM


சென்னையில் இரண்டு ஏ.டி.எம். மெஷின் உள்ள மையங்களில் தீக்குச்சி மற்றும் பிளேடு துண்டுகளைப் பயன்படுத்தி, பல லட்சம் ரூபாய்களை கொள்ளையடித்த பலே கில்லாடிகளான பீகார் இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.   சென்னையில் அண்ணாசாலை, அண்ணா சதுக்கம், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி , சாந்தோம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும்போது, பணம் எடுத்தாக இரண்டு செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததாகவும், மேலும் தங்கள் கணக்கில் இருந்த பணம் திடீரென மாயமாவதாகவும் ஏ.டி.எம். ஹேங் ஆகி  நின்றுவிட்டதால், பணம் எடுக்காத நிலையிலும், பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்ததாகவும், வாடிக்கையாளர்கள் பலர், தங்களது வங்கிகளில் தொடர்ந்து புகார் அளித்தனர். இதையடுத்து, குறிப்பிட்ட ஏ.டி.எம். மையங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்த வங்கி அதிகாரிகளுக்கு, வடமாநில இளைஞர்கள் இருவர் மீது சந்தேகம் வந்தது.    காவல்துறையினரும் அந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் எதுவும் புரியாத நிலையில், கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருந்தபோதுதான், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மனோகர் குமார், முன்னா குமார் ஆகியோர் மீண்டும், கடற்கரைச் சாலையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் வாடிக்கையாளர் ஒருவரின் பணத்தை தங்களது வழக்கமான பாணியில் திருடிவிட்டு, வெளியேறியதைப் பார்த்தனர். சி.சி.டி.வி. காட்சியில் பார்த்த உருவம் என்பதால், இருவரையும் வளைத்துப் பிடித்த காவல்துறையினர், அண்ணா சதுக்கம் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

 வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை கொள்ளையடித்த முறை குறித்து, கொள்ளையர்கள் கொடுத்த விளக்கம் புரியாமல் முழித்த காவல்துறையினர், இருவரையும் ஏ.டி.எம்.முக்கே அழைத்துச் சென்று நடிக்க வைத்தனர். அப்போதுதான், அவர்கள் எத்தகைய முறையை பின்பற்றி கொள்ளையடித்தார்கள் என்பது காவல்துறையினருக்கு மட்டுமின்றி, வங்கி அதிகாரிகளுக்கும் தெரியவந்தது.  இரண்டு ஏ.டி.எம். மெஷின்கள் உள்ள மையங்களை தேர்வு செய்யும் இந்த இருவரும், ஒரு ஏ.டி.எம். மெஷினில் பொருத்தப்பட்டுள்ள பட்டன்களில் தீக்குச்சித் துண்டு அல்லது சிறிய பிளேடு துண்டை யாருக்கும் தெரியாத வகையில் சொருகி வைக்கின்றனர். 

அதன்பின்னர், யாராவது பணம் எடுக்க வந்தால், உடனே ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று, மற்றொரு மெஷினை ஆக்கிரமித்துக் கொள்ளும் அவர்கள், தாங்கள் ஏற்பாடு செய்துவைத்துள்ள மெஷினை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வகை செய்கின்றனர்.  குறிப்பிட்ட ஏ.டி.எம். மெஷினில் வாடிக்கையாளர் தனது டெபிட் கார்டை சொருகிய பிறகு பட்டனை அழுத்தும்போது, கார்டை ரீட் செய்யும் மெஷின், பட்டனில் சொருகப்பட்டுள்ள தீக்குச்சி அல்லது பிளேடு துண்டால், அப்படியே ஹேங் ஆகி செயல்படாமல் நின்றுவிடும். இதனால், பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு உதவுவது போல் நடிக்கும் கொள்ளையர்கள், தாங்கள் நிற்கும் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக் கொள்ளக் கூறிவிட்டு, ஹேங் ஆகியுள்ள ஏ.டி.எம்முக்கு நகர்ந்து, பட்டனில் உள்ள தடையை நீக்குகின்றனர்.  இப்போது ரகசிய பின் எண்ணை தட்டினால் பணம் கொடுக்க அந்த மெஷினில் தயாராக இருக்கும். இந்த சமயத்தில் மற்றொரு ஏ.டி.எம்.மில் வாடிக்கையாளர் அழுத்தும் ரகசிய பின் எண்ணை தெரிந்து கொள்ளும் கொள்ளையர்கள், தாங்கள் நிற்கும் ஏ.டி.எம்.மிலும் அதே எண்ணை தட்டி, பணத்தை எடுத்துவிட்டு, மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்புகின்றனர். நாம் எடுத்தால் பணம் வரவில்லை, இவர்களுக்கு வருகிறதே என குழம்பும் வாடிக்கையாளர்கள் பணத்தை எண்ணி முடித்துவிட்டு, அதன்பிறகு செல்போனில் வந்துள்ள குறுஞ்செய்தியை பார்க்கும்போதுதான், தான் எடுத்ததை விட, கூடுதல் பணம் எடுக்கப்பட்டதாக வந்துள்ளதை பார்த்து வங்கிகளில் புகார் தெரிவித்துள்ளனர். பீகாரில் இருந்து 10க்கும் மேற்பட்டோர் ஒரே விமானத்தில், கொள்ளையடிக்க வேண்டிய நகரங்களுக்குச் சென்று, அங்கு தனித்தனியாக பிரிந்து, தங்களது நூதன கொள்ளையை அரங்கேற்றுவார்களாம். ஓரிரு நாட்களில் சில லட்சங்களை சுருட்டிய பின்னர், விமானத்திலேயே பறந்துவிடுவதால், அவர்களை அடையாளம் கண்டாலும், எங்கிருக்கிறார்கள் என்று தெரியாமல் காவல்துறையினர் விழிபிதுங்கி வந்ததாக கூறப்படுகிறது.  

click me!