செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மே 15க்கு தள்ளி வைப்பு: உச்ச நீதிமன்றம்!

By Manikanda PrabuFirst Published May 6, 2024, 11:52 AM IST
Highlights

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 15ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது

திமுக முன்னாள் அமைச்சர்  செந்தில்பாலாஜி  தனக்கு ஜாமின் கோரியும், கைது நடவடிக்கைக்கு எதிராகவும் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், அவர் எம்.எல்.ஏ பொறுப்பில் உள்ளதால் அதிகாரமிக்க நபராக உள்ளார். எனவே வழக்கின் சாட்சியங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.

அதேசமயம், 320 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாகவும், வேண்டுமென்றே இந்த வழக்கில் தாமதம் செய்ய வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் பதில் மனுவை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கிறது என செந்தில் பாலாஜி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, செந்தில் பாலாஜி வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்காக அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து, தாமதம் செய்ததற்காக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது.

ஜார்கண்ட் அமைச்சர் பி.ஏ.வின் வீட்டு பணியாளரிடம் இருந்து கோடிக்கணக்கான பணம் பறிமுதல்!

அதன் தொடர்ச்சியாக, பதில் மனுவை நாங்கள் இன்னமும் படித்து பார்க்கவில்லை என கூறி, வழக்கின் விசாரணையை மே 6ஆம் தேதிக்கு (இன்று) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளி வைத்தனர். அதன்படி, செந்தில் பாலாஜி ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை சார்பில் வழக்கை தள்ளி வைக்க கோரிக்கை வைத்தனர். அதற்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் வழக்கை மே 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள் அடுத்த முறை நிச்சயம் விசாரணை நடைபெறும் என உறுதி அளித்துள்ளனர்.

மே 18ஆம் தேதியிலிருந்து ஜூலை 7ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தில் கோடை விடுமுறை என்பதால், மே 15ஆம் தேதி நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் அதன்பிறகு சுமார் ஒரு மாதம் வரை செந்தில் பாலாஜி காத்திருக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!