திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற சித்திரை தேரோட்ட திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ரங்கா ரங்கா கோஷம் முழங்க நம்பெருமாளை வழிபட்டுச் சென்றனர்.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் மாதம் தோறும் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறும். ஆலயத்தின் முதன்மையான விழாவாக மார்கழியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பும், அதற்கு அடுத்தபடியாக இந்த சித்திரை தேரோட்ட விழாவும் கொண்டாட்டப்படுகிறது.
திருச்சி ஸ்ரீரங்க ரங்கநாதரை பொறுத்தவரை புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் விருதுநகர் போன்ற தென் மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்களுக்கு குலதெய்வமாகவும், பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த மக்களுக்கு இஷ்ட தெய்வமாகவும் அருள் பாலிக்கிறார்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேரோட்டம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்தார். இந்நிலையில் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று காலை சரியாக ஆறு மணி அளவில் துவங்கியது.
பல்வேறு மாவட்டங்களை சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று சேர்ந்து ரங்கநாதா கோவிந்தா என்கிற நாமம் முழங்க திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். சித்திர வீதிகளில் வலம் வந்த திருத்தேரை பார்ப்பதாற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு உள்ளனர் என்பதால் சுமார் 500க்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.