கொடநாடு பங்களாவில் சிறப்பு குழு ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி!

By Manikanda PrabuFirst Published Feb 23, 2024, 1:37 PM IST
Highlights

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக பங்களாவை சிறப்பு குழுவினர் ஆய்வு செய்ய உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்பட்டவர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.

இந்த மர்ம மரணங்களுக்குப் பின்னணியில் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், மனோஜ் ஆகியோர் தெரிவித்தனர். இதனால், கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Latest Videos

இதனிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் கொடநாடு வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. கொடநாடு வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்த வழக்கானது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல்  காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பாக கனகராஜ் மற்றும் விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி  போலிசார் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாளையாறு மனோஜ், சயான்  ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

இந்த வழக்கு கடந்த 9ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் நீதிபதிகள் தலைமையில் புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும் என எதிர்தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். அதற்கு பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மகாராஷ்டிர தொகுதி பங்கீடு: உத்தவ் தாக்கரேவுடன் ஒரு மணி நேரம் செல்போனில் பேசிய ராகுல்!

இன்றைய விசாரணையின்போது, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரிய தமிழக அரசு, சிபிசிஐடி போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரியத்துறை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு சம்பவம் நடந்த கொடநாடு பங்களாவில் ஆய்வு செய்யும், அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என புதிய பதில் மனுத்தாக்கல் செய்தது.

இதற்கு நீதிமன்றம் எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. சிபிசிஐடி போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரியத்துறை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு செய்ய அனுமதி அளித்த நீதிமன்றம், தடையங்களை அழிக்க கூடாது எனவும், ஆய்வு செய்வதை முழுவதுமாக வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 8ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

click me!