தமிழகத்தில் நிஃபா வைரஸ் காய்ச்சல் ! அதிர்ச்சி தகவல் !!

By Selvanayagam PFirst Published Jun 18, 2019, 5:13 PM IST
Highlights

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிஃபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு 17 பேர் பலியாகினர். இந்தாண்டு முதன் முதலில் கேரள கல்லூரி மாணவர் ஒருவருக்கு நிஃபா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

அவரது உறவினர்கள், நண்பர்களும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். நிஃபா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் வகையில், கேரள - தமிழக எல்லைப் பகுதியில் மருத்துவக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள பூவிழுந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர்தான் அவர். கேரளாவில் வேலை செய்து வந்த  இவர், சில நாட்களுக்கு முன்பாகக் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சொந்த ஊருக்குத் திரும்பினார். 

ராமலிங்கம் முதலில் அங்குள்ள  ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது, அவருக்கு நிஃபா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகம் மருத்துவர்கள் இடையே ஏற்பட்டது. இதையடுத்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு ராமலிங்கத்திடம் அறிவுறுத்தினர் மருத்துவர்கள்.

இதையடுத்து ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமலிங்கம், மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் தனிப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனே மத்திய சோதனைக் கூடத்திற்கு அனுப்பட உள்ளதாகவும், அதன் முடிவுகள் கிடைக்கப்பட்ட பிறகே அவருக்கு நிபா வைரஸ் தொற்று உள்ளதா என்பது உறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல, சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் பணியாற்றிய கடலூர் மாவட்ட கூலித் தொழிலாளி ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது.

click me!