நீட் தேர்வில் கட்ஆஃப் மதிப்பெண் குறைந்ததால் விரக்தி… பட்டுக்கோட்டையில் மற்றுமொரு மாணவி தற்கொலை !!

By Selvanayagam PFirst Published Jun 6, 2019, 7:01 AM IST
Highlights

நீட் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வி அடைந்ததால் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ தற்கொலை செய்து கொண்ட நிலையில் , நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும், கட் ஆஃப் மதிப்பெண் குறைந்துபோனதால் பட்டுக்கோட்டையில் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
 

பட்டுக்கோட்டை சீனிவாசன் நகரில் வசிப்பவர் நம்புராஜ். இவர் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் கட்டணம் செலுத்தி இருசக்கர வாகனங்கள் பாதுகாக்கும் நிலையம் நடத்தி வருகிறார். இவரது மகள் வைஷியா 

வைஷியா பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்து விட்டு மருத்துவம் படிக்க விரும்பி கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதியுள்ளார்.


இந்நிலையில், நேற்று பிற்பகலில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.இதில், வைஷியா 720-க்கு 230 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். ஆனால், மருத்துவப் பட்டப்படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதுமானதல்ல என்பதால், மன வேதனைக்கு ஆளாகியுள்ளதாக தெரிகிறது.

இதனால் விரக்தியடைந்த வைஷியா,  தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த இவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீஸார் வழக்குப் பதிந்து, வைஷியா சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் மாணவியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து, போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே நீட் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வி அடைந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் மற்றுமொரு மாணவி தீக்குளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!