பள்ளிக் குழந்தைகளுக்கு தண்டனை கொடுக்கக் கூடாது: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By SG Balan  |  First Published Apr 25, 2024, 8:09 PM IST

குழந்தைகளைக் கண்காணிக்கலாமே தவிர, அடக்கி ஆளக் கூடாது என அறிவுறுத்திய நீதிபதி, பள்ளிக் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை ஒழிக்க தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிகளை அமல்படுத்த வேண்டும் என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டார்.


பள்ளிக் குழந்தைகளுக்குத் தண்டனை வழங்குவதைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காமாட்சி சங்கர் ஆறுமுகம் என்பவர் தமிழகப் பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனைகள் கொடுக்கப்படுவதை தடை செய்யும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிகளை அமல்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

Tap to resize

Latest Videos

இந்த வழக்கு வியாழக்கிழமை நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது, பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பதற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் பள்ளிகளில் குழந்தைகளை தண்டிப்பதைத் தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

வாதங்களைக்க கேட்ட நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், தண்டனை எந்தவிதத்திலும் ஒரு குழந்தையை நல்வழிப்படுத்தாது எனவும் குழந்தைகளை பாதுகாப்பான சூழலில் வளர அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், குழந்தைகளும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க இடமளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

குழந்தைகளைக் கண்காணிக்கலாமே தவிர, அடக்கி ஆளக் கூடாது என அறிவுறுத்திய நீதிபதி, பள்ளிக் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை ஒழிக்க தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிகளை அமல்படுத்த வேண்டும் என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டார்.

ஆணையத்தின் விதிகளை பள்ளிக்கல்வித் துறை அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்ப வேண்டும் என்றும் ஆணையத்தின் விதிகளைப் பின்பற்றுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க பள்ளிகளில் தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர் மற்றும் மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

click me!