தேசியப் பஞ்சாலைத் தொழிலாளர்கள் 8-வது நாளாக வேலைநிறுத்தம்... 500-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசைக் கண்டித்து முழக்கம்...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 28, 2018, 7:41 AM IST
Highlights

புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தாத தேசிய பஞ்சாலைக் கழக நிர்வாகத்தையும், மத்திய அரசையும் கண்டித்து பஞ்சாலைத் தொழிலாளர்கள் கோயம்புத்தூரில் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டம் எட்டாவது நாளை எட்டியது. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
 

கோயம்புத்தூர்

புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தாத தேசிய பஞ்சாலைக் கழக நிர்வாகத்தையும், மத்திய அரசையும் கண்டித்து பஞ்சாலைத் தொழிலாளர்கள் கோயம்புத்தூரில் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டம் எட்டாவது நாளை எட்டியது. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.


 
மத்திய அரசின் தேசியப் பஞ்சு ஆலைக் கழகத்தின்கீழ் தமிழகத்தில் மட்டும் ஏழு பஞ்சு ஆலைகள் இயங்குகின்றன. இங்குப் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். 

இந்தமுறை கடந்த மே மாதமே ஊதிய ஒப்பந்த போட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படவில்லை. இது இங்குப் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து என்.டி.சி. ( National Textile Corporation) பஞ்சாலைத் தொழிலாளர்கள் தங்களது 15 கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்தனர். அதன்படி, பஞ்சப்படி, வீட்டு வாடகைப்படி, பணி மூப்பு அடிப்படையில் ஊதிய உயர்வு,  தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவது என 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 20-ஆம் தேதி போராட்டத்தைத் தொடங்கினர். 

எல்.பி.எஃப், சி.ஐ.டி.யூ, ஐ.என்.டி.யூ.சி, ஏ.டி.பி. என நான்கு தொழிற்சங்கங்கள் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் என்.டி.சி. நிர்வாகம் எவ்வித உடன்பாட்டுக்கும் வரவில்லை. இதனையடுத்து என்.டி.சி. பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டம் நேற்று எட்டாவது நாளை எட்டியது. 

'ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்' என்று வலியுறுத்தி நேற்று தொழிற்சங்கங்கள் சார்பில் கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தொழிலாளர்கள். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எல்.பி.எஃப். சங்கத் தலைவர் பார்த்தசாரதி, சி.ஐ.டி.யூ. பஞ்சாலை சங்க[ப் பொதுச் செயலாளர் பத்மநாபன், ஐ.என்.டி.யூ.சி. கோயம்புத்தூர் செல்வன், சீனிவாசன், ஏடிபி தனகோபால் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில் 500-க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் பங்கேற்று என்.டி.சி. நிர்வாகம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 

click me!