ஒரே நாள்ல சென்னைய விட்டுப் போனவங்க 1 லட்சத்து 52 ஆயிரம் பேர்..!

First Published Oct 16, 2017, 12:25 PM IST
Highlights
more than one and half lakh chennaites went to their native for diwali festival


மக்களிடையே தீபாவளி கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. அதற்கு ஏற்றார்ப் போல், இந்த முறை மழையும் வருமா வராதா என்று எதிர்பார்த்து, திக் திக் என்று நாட்களைக் கடத்தி, ஒரு வழியாக தீபாவளி குதூகலத்துக்கு எந்த சேதாரமும் இது வரை இல்லை. இந்த நிலையில் வழக்கம் போல் சென்னையில் வசித்து வரும், தமிழகத்தின் தென் மாவட்ட மக்களும், மேற்கு மாவட்ட மக்களும் வெள்ளிக்கிழமை முதலே தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர். குடும்பத்துடன் பண்டிகைக் கொண்டாட குதூகலத்துடன் ஒரே நாளில் செல்லத் தொடங்கியதால், நேற்று ஒரு நாள் மட்டும் அந்த குதூகலம் பயணத்தில் இடைஞ்சலாக மாறிப் போனது. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நேற்று ஒரே நாளில் சுமார் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 48 பயணிகள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதாக, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று சென்னையில் வழக்கத்துக்கு மாறாக போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்பட்டது. குறிப்பாக, பெருங்களத்தூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்கள் பல அப்படியே தேங்கி நின்றன. அதேபோல் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் பலத்த போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. 

பெருங்களத்தூரில் ஐடி., பணியாளர்கள் பலர், ஆம்னி பஸ்களுக்காகக் காத்திருந்தனர். வண்டலூரில் பாலப் பணிகள் நடப்பதால், அங்கும் சாலையில் நெரிசல் ஏற்பட்டது. வழக்கமாக ஞாயிற்றுக் கிழமை என்றால், ஜிஎஸ்டி சாலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் நெரிசல் இருக்காது. ஆனால் நேற்று வழக்கத்துக்கு மாறாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிச் சின்னாபின்னமாகினர் தென்மாவட்டங்களுக்குச் செல்வோர். தாம்பரம் இருபுலியூர் பாலத்தில், கோயம்பேட்டில் இருந்தும், தாம்பரத்தில் இருந்தும் ஒரே நேரத்தில் பஸ்கள் வந்து குவிந்ததால், பாலத்தைக் கடக்கவே வெகு நேரம் ஆனது. 

click me!