ஜனநாயக மாண்பினை நிலைநாட்டிய பெருமை மிக்கவர்… மறைந்த சுர்ஜித்சிங் பர்னாலாவுக்கு ஸ்டாலின் புகழாரம்…

First Published Jan 14, 2017, 10:01 PM IST
Highlights

ஜனநாயக மாண்பினை நிலைநாட்டிய பெருமை மிக்கவர்… மறைந்த சுர்ஜித்சிங் பர்னாலாவுக்கு ஸ்டாலின் புகழாரம்…

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான சுர்ஜித்சிங் பர்னாலா காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை கொண்டவரும் கருணாநிதியின் பேரன்புக்குரிய நண்பருமான பர்னாலா என்னிடத்திலும் மிகுந்த அன்பு கொண்டவர்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் பொறுப்பிலும் துணை முதல்வர் பொறுப்பிலும் நான் இருந்தபோது தமிழகத்தின் வளர்ச்சி குறித்து என்னிடம் கேட்டறிந்தவர்.

ஆளுநர் பதவிக்கு மதிப்பும் பெருமையும் தேடித்தரும் வகையில் ஜனநாயக நெறிமுறைகளுடன் செயல்பட்டவர் பர்னாலா என அவருக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மக்களின் ஆதரவுடன் 1989ஆம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றிபெற்று அமைக்கப்பட்ட தி.மு.கழக அரசை மக்கள் தீர்ப்புக்கு விரோதமாக கலைத்திட அன்றைய அ.தி.மு.க தலைமையும் சமூக நீதிக்கு எதிரான சக்திகளும் பெரு முயற்சி செய்தன.

1991ஆம் ஆண்டு ஈழப்போராளிகளுக்கு தி.மு.க அரசு துணை நிற்கிறது என்றும் அதன் காரணமாக தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும் சொல்லி, தி.மு.கழக அரசைக் கலைக்க அன்றைய ஆளுநர் பர்னாலாவிடம் மத்திய அரசு அறிக்கை கோரியது.

ஆனால் பர்னாலா துணிவுடன் ஜனநாயக நெறியினைக் காக்கும் வகையில், அமைதிப்பூங்காவாகத் தமிழகத்தைப் பாதுகாக்கும் தி.மு.க அரசுக்கு எதிராக அறிக்கை தரமாட்டேன் என மத்திய அரசிடம் உறுதியாகத் தெரிவித்த மாண்புக்குரியவர்.

மாநில அரசைக் கலைக்க ஆளுநர் அவர்கள் அறிக்கை தராத காரணத்தினால்,  இந்திய அரசியல் சட்டத்தின் 356ஆவது பிரிவில் otherwise என்கிற பகுதி முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டு, தி.மு.கழக அரசு கலைக்கப்பட்டது.

ஒரு நல்லாட்சியைக் கலைப்பதற்கு ஒரு போதும் துணை நிற்க மாட்டேன் என ஜனநாயக மாண்பினை நிலைநாட்டிய பெருந்தகை சுர்ஜித்சிங் பர்னாலாவின் மறைவுக்கு கழகத்தின் சார்பிலும், கருணாநிதியின் சார்பிலும் நெஞ்சார்ந்த இறுதி வணக்கத்தினை செலுத்தி, அவரது பிரிவால் துயர்ப்படும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

click me!