பாறைகள் உடைக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்துகள் வெடித்து சம்பவ இடத்திலையே 4 பேர் உடல் சிதறி உயிர் இழந்துள்ளனர். அதிகமான அளவு வெடி மருந்துகள் இருப்பதால், அந்த பகுதிக்கு தீயணைப்பு துறையினர் போலீசார் அருகே செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது
வெடி மருந்துகள் வெடித்து விபத்து
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் - கீழஉப்பிலிக் குண்டு சாலையில் ஒரு தனியார் கிரஷர் (கல்குவாரி) உள்ளது. இந்த கிரஷரில் சல்லி, எம் சான்ட் போன்ற பொருட்கள் பாறைகளில் இருந்து உடைக்கப்படுகிறது. இந்த கிரசரில் பாறைகளை உடைப்பதற்கு வெடிமருந்து பயன்படுத்தப்படுவதாகவும் . பாறைகளை வெடிக்கக் கூடிய வெடிமருந்துகள் அந்த கிரஷரின் அருகே உள்ள ஒரு அறையில் இன்று காலை இறக்கிய போது வெடிமருந்துகள் வெடித்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
4 பேர் உடல் சிதறி பலி
இந்த விபத்தின் காரணமாக மனித உடல்கள் காட்டுப் பகுதியில் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. மேலும் அந்த வெடி மருந்து இருந்த கட்டிடம் அருகே இருந்த இரண்டு வாகனங்கள் முற்றிலுமாக உடைந்தது. மேலும் விபத்து நடந்த பகுதியில் அதிகமான அளவு வெடி மருந்துகள் இருப்பதால், அந்த பகுதிக்கு தீயணைப்பு துறையினர் போலீசார் அருகே செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.
மீட்பு பணி தீவிரம்
இதன் காரணமாக மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த வெடி விபத்தின் போது காரியாப்பட்டியை சுற்றியுள்ள சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள வீடுகளில் அதிர்வுகள் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளன.