திமுக தேர்தல் அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ் - கனிமொழி எம்.பி. சொன்ன தகவல்!

By Manikanda PrabuFirst Published Feb 23, 2024, 2:54 PM IST
Highlights

திமுக தேர்தல் அறிக்கை மக்கள் அறிக்கையாக இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. திமுகவை பொறுத்தவரை, மக்களவை தேர்தலுக்கான ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டணி பேச்சு நடத்தும் குழு, கணிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் 5 பேர் கொண்ட குழு என மொத்தம் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையிலான 11 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவானது, திமுக தலைவரும்,முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பட்ட மக்களின் கருத்துக்களை கேட்டு வருகின்றனர். அதனடிப்படையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

அந்த வகையில், வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள பேபி மஹாலில் கனிமொழி தலைமையில், தேர்தல் அறிக்கைக்காக மக்களின் கருத்துக்களை கேட்கும் கூட்டம் நடைபெற்றது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு பரிந்துரைகளை அளித்தனர். 

அந்த நிகழ்வில் பேசிய கனிமொழி எம்.பி., “திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை எப்போதும் மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும் என்பது, கலைஞர் காலம் முதல் இன்று நம்முடைய திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரை தொடர்கிறது. எனவே, மக்களைச் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு, அந்த கருத்துக்களைப் பதிவு செய்து. அதைத் தேர்தல் அறிக்கையை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.” என்றார்.

அதன்படி, “ஒவ்வொரு முறையும் தேர்தல் அறிக்கை உருவாக்கப்படும் போது, மக்களைச் சந்தித்து அவர்களுடைய விவரங்களை உள்வாங்கி உருவாக்கப்படுவதுதான் திமுகவின் தேர்தல் அறிக்கை. அதன்படி, நாங்கள் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, அங்கே இருக்கக்கூடிய விவசாய மக்கள், தொழிலாளிகள், தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர், மாணவர்கள் என்று பல்வேறு துறைகளைச் சார்ந்த மக்களைச் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு, தேர்தல் அறிக்கை உருவாக்கக் கூடிய பணியில் ஈடுபட்டு இருக்கின்றோம்.” என கனிமொழி தெரிவித்தார்.

திடீர் திருப்பம்.. அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி? எத்தனை தொகுதிகள் தெரியுமா? அதிர்ச்சியில் பாஜக!

தொடர்ந்து பேசிய அவர், “உங்களுடைய கோரிக்கைகளை, உங்களுடைய கருத்துக்களை, நீங்கள் எங்களுக்குக் கொடுக்கக்கூடிய அறிவுரைகளை, நாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, அதன்பிறகு பரிசீலித்து, நம்முடைய முதலமைச்சரிசம் கலந்துரையாடித் தேர்தல் அறிக்கையை உருவாக்க இருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம்தான் இந்த நாட்டின் தலையெழுத்தை, இந்த நாட்டின் இன்றைய  நிலையை மாற்றிக் கட்ட முடியும் என்ற அந்த நம்பிக்கையோடு வந்து இருக்கக்கூடிய உங்கள் அதனைப் பேருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

click me!