கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ‘ஜல்லிக்கட்டு’ இந்த ஆண்டு நிச்சயம் நடத்தப்படும் என்று கூறியிருக்கிறார் அமைச்சர் மூர்த்தி.
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் துவங்கின. வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து முகூர்த்த கால் நடப்பட்டதுடன், போட்டிகளுக்கான நடைமுறை தொடங்கியது. 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக முகூர்த்த கால் நடுவது, பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் அனுசரிக்கப்படுகிறது.
undefined
வழக்கம்போலவே, வரும் 16ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த போட்டி ஏற்பாட்டுக் குழு திட்டமிட்டுள்ளது. ஆனால், நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும், ஊரடங்கையும் விதித்துள்ளது. தமிழ் நாட்டில் தற்போது இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
அரசு இன்று வரையிலான கட்டுப்பாடுகளையே அறிவித்திருந்த நிலையில், இன்று புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, ‘ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.அதற்கான கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை முதல்வர் இன்று அறிவிப்பார்.அவர் அறிவித்தவுடன் போர்க்கால அடிப்படையில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நிச்சயம் நடைபெறும்’ என்று உறுதி அளித்து இருக்கிறார்.