"மாம்பழம்" பிரச்சினை - பாமக தொண்டர்களுக்கு மட்டுமல்ல! விவசாயிகளுக்கும் தான்! "சீசன் முடிவதற்குள் தீர்த்து வைங்கப்பா"!

Published : Jun 26, 2025, 12:58 PM IST
mango farmer

சுருக்கம்

பாமகவில் நிலவும் உட்கட்சிப் பிரச்சனையுடன், மாம்பழ விலை வீழ்ச்சியால் விவசாயிகளும் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். விளைச்சல் அதிகரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் சிக்கல்களால் மாம்பழங்கள் வீணாகி வருவதால், அரசின் உடனடி தலையீடு தேவைப்படுகிறது.

மாம்பழத்திற்கும், மஞ்சள் நிறத்திற்கும் நேரம் சரியில்லையா?

ராசிப்படியோ அல்லது செண்டிமென்ட் படியோ தற்போது மாம்பழத்திற்கு நேரம் சரியில்லை போலும். தமிழக அரசியலில் மாம்பழத்தை தேர்தல் சின்னமாக கொண்ட பாமகவில் தற்போது பெரும் குழப்பம் நிலவி வருகிறது. முன்பெல்லாம் யாரோ ஒரு தொண்டர் மூலமாகவோ அல்லது ஏதேனும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் மூலமாகவோ பிரச்சினை வரும். அது அப்படியே கண்டிப்புடன் காணாமல் போகும். ஆனால் தற்போது பாமகவில் பிரச்சினை ஏற்பட்டு இருப்பது அதனை நிறுவிய மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவருடைய நேரடி வாரிசான அன்புமணி இடையே.

முடியாமல் ஜவ்வாக இழுக்கும் உட்கட்சி பூசல்

பாமக பிரச்சினை முதலில் அரசியல் என்றும் நாடகம் எனவும் கூறப்பட்டாலும், அது தற்போது ஹாலிவுட் படத்தைவிட பெரிய அளவில் ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள், பதவி பறிப்பு என தினமும் ஒரு பிரச்சினை தலைதூக்கியுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இது தேவையில்லாத விவகாரம் என்றும், இந்த பிரச்சினை கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் சீட் பேரத்தை சீர்குலைக்கும் எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவும் மாம்பழ பிரச்சினைதான்

இந்த நிலையில், தமிழகத்தில் மற்றொரு மாம்பழ பிரச்சினை தலைதூக்கியுள்ளது. ஆமாம், மாம்பழ விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். நடப்பாண்டில், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தர்மபுரி, திருவள்ளூர், தேனி, திருப்பத்துார், சேலம், வேலுார், மதுரை மாவட்டங்களில் மாம்பழங்கள் விளைச்சல் அதிகம். இங்கு, 3.60 லட்சம் ஏக்கரில் மாமரங்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. ஏக்கருக்கு இரண்டு முதல் 2.50 டன் வரை மாம்பழம் உற்பத்தியாவது வழக்கம்.நடப்பாண்டு ஏக்கருக்கு, 3.50 டன் வரை விளைச்சல் அதிகரித்துள்ளது.அண்டை மாநிலங்களிலும் விளைச்சல் அதிகம். இதனால், அறுவடை செய்த மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

பக்கத்து மாநிலத்தை பாக்க மாட்டீங்களா?

தமிழகத்தில் உள்ள மாம்பழ கூழ் தயாரிப்பு ஆலைகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், நாள்தோறும் பல டன் மாம்பழங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆந்திர மாநிலத்தில், இதேபோன்று பிரச்சினை எழுந்த நிலையில், அந்த மாநில அரசு எடுத்த நடவடிக்கையால், விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர். அங்குள்ள மாம்பழ கூழ் தயாரிப்பு ஆலைகளில், தமிழக மாம்பழங்கள் கொள்முதல் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.தனியார் மாம்பழ கூழ் ஆலைகளை தொடர்ச்சியாக இயங்க செய்து, கொள்முதல் செய்த மாம்பழங்களுக்கு மானியம் வழங்க, ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக அரசு நடவடிக்கை

மாம்பழ விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்கும் நோக்குடன் தமிழக அரசு சார்பில் மத்திய வேளாண் அமைச்சரிடம் கோரிக்கை மனுக கொடுக்கப்பட்டுள்ளது. அதில், மாம்பழ கூழ் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், மாம்பழ பிரச்னையை மத்திய அரசு பக்கம் திருப்பும் முயற்சி நடப்பதாக மாம்பழ விவசாயிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சீசன் முடிவதற்குள் பிரச்சினை முடியுமா?

தமிழகத்தில் மாம்பழ விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.ஆனால், சந்தை தலையீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் எனவும், ஒரு டன் மாம்பழத்திற்கு 7766 ரூபாய் என, நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளதை விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் மாம்பழ கூழ் ஆலைகள், 5000 ரூபாய் வழங்கியது போக, மீதமுள்ள தொகையை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்' என, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள விவசாயிகள், மத்திய அரசிடம் இருந்து பதில் வருவதற்குள், மாம்பழ சீசன் முடிந்து விடும் என கூறியுள்ளனர். எனவே, இப்போதே சந்தை தலையீட்டு திட்டத்தை செயல்படுத்தி, மாநில அரசு தனது பங்களிப்பை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனவும், மத்திய அரசு மீது பழியை போட்டு காலத்தை கடத்தாமல், விவசாயிகளுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாம்பழத்திற்கு கட்டம் சரியில்லை போலும்

சொல்லப்போனால் மாம்பழத்திற்கு தற்போது கட்டம் சரியில்லை போலும். மாம்பழ சீசன் முடிவதற்குள்ளும், தேர்தல் சீசன் தொங்குவதற்குள்ளும் மாம்பழ பிரச்சினை முடிவுக்குள் வந்தால் பாமக தொண்டர்கள் மட்டுல்ல, விவசாயிகளும் மகிழ்ச்சி அடைவர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஓட்டு போட்ட நீங்கள் தான் ஆட்சி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கமல்ஹாசன் அதிரடி
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?