ரேஷன் கடையில் கூடுதலாக ஒரு கிலோ சக்கரை.! மீண்டும் உளுந்து.? அறிவிப்பு என்னாச்சு.?

Published : Jun 26, 2025, 12:33 PM IST
ration shop

சுருக்கம்

தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை என அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத்தை கண்டித்துள்ளார்.

Ration shop Anbumani Statement : தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியது.  இதுவரை 90 % வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக தெரிவித்துள்ளது. ஆனால் மாதம் ஒரு முறை மின்சாரம் கணக்கெடுப்பு, சிலிண்டர் விலை குறைப்பு, ரேஷன்கடைகளில் கூடுதலாக சக்கரை, மீண்டும் உளுந்து உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டங்கள் இதுவரை செயல்படுத்தவில்லையென விமர்சிக்கப்பட்டு வருகிறது  இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் அவர்களை தமிழக அரசு ஏமாற்றி வருகிறது. 

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக

தமிழ்நாட்டு மக்களில் ஒரு தரப்பினரின் வாக்குகளை வாங்குவதற்காக வாக்குறுதிகளை அளித்து விட்டு, வெற்றி பெற்ற பிறகு அவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்றுவது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் ஆகும். இதை தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக அரசு செய்து வருவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் 37,328 நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவை கூட்டுறவுத் துறை, உணவுத் துறை உள்ளிட்ட பல துறைகளின் கீழ் செயல்பட்டு வருவதால், அதில் பணியாற்றும் பணியாளர்களின் பணிச்சூழல், ஊதியம் உள்ளிட்டவற்றில் பாகுபாடுகள் காணப்படுகின்றன. 

இதைக் கருத்தில் கொண்டு திமுக ஆட்சிக்கு வந்தால் பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளும் ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி ( வாக்குறுதி எண் 236) அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதனால் நியாயவிலைக்கடை பணியாளர்களின் துயரங்கள் தொடருகின்றன. அவர்களுக்கான ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் கேட்பாரற்று கிடக்கின்றன.

10 சதவிகித வாக்குறுதி கூட நிறைவேறவில்லை

அனைத்துப் பொருள்களும் பொட்டலம் செய்து வழங்கப்படும் (வாக்குறுதி எண் 238), ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்- நிறுத்தப்பட்ட உளுந்து மீண்டும் வழங்கப்படும் (வாக்குறுதி எண் 240) என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளையும் திமுக அரசு கடைக்கண் கொண்டும் பார்க்கவில்லை.கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைக் கொடுத்து, மக்களை மயக்கி ஆட்சிக்கு வந்த திமுக, அவற்றில் 10 விழுக்காட்டைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 90% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்; 99% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்; இனி நிறைவேற்றுவதற்கு வாக்குறுதிகளே இல்லை என்றெல்லாம் கதை கட்டி வருகின்றனர். ஆனால், உண்மை நிலை ஏமாற்றமும், வேதனையும் அளிப்பதாகவே உள்ளது.

கூடுதலாக சக்கரை, உளுந்து என்ன ஆச்சு.?

ஆட்சியாளர்கள் செய்யவே கூடாத குற்றங்களில் முதன்மையானது மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்கும் துரோகம் ஆகும். ஆனால், அதைத் தான் திராவிட மாடல் அரசு தொழிலாகவும், வாடிக்கையாகவும் வைத்திருக்கிறது. தமிழகத்தை ஆளும் முதலமைச்சருக்கு மனசாட்சியும், நேர்மை உணர்வும் இருந்தால் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாக அன்புமணி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மாடு பிடிச்ச தம்பிக்கு கார்.. பிடிபடாத மாட்டுக்கு டிராக்டர்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ரிசல்ட்ஸ்!
விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!