தாயின் கண்முன்னே சிறுமியை தூக்கிச் சென்று கொடூரமாக கொன்ற சிறுத்தை சிக்கியது!

Published : Jun 26, 2025, 11:18 AM IST
Valparai

சுருக்கம்

வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் சிறுமி ஒருவரை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் உடல் மீட்கப்பட்டு, சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். இந்நிலையில், சிறுத்தை கூண்டில் சிக்கியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே உள்ள பச்சைமலை எஸ்டேட் வடக்கு பிரிவில், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு அமைந்து உள்ளது. இந்த குடியிருப்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோன் முண்டா - மோனிகா தேவி தம்பதியினர் தனது 2 குழந்தைகளுடன் தங்கி இருந்து தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

தாயின் கண்முன்னே சிறுமியை இழுத்து சென்ற சிறுத்தை

இந்நிலையில் மோனிகாதேவி வீட்டின் பின்புறம் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அவரது மூத்த மகள் ரோஷினி குமாரி (7) உடனிருந்தார். மோனிகாகுமாரி தண்ணீர் குடத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார். சிறுமி ரோஷினி குமாரி குடிநீர் குழாய் அருகே இருந்தார். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பதறியபடி மோனிகாதேவி ஓடி வந்தார். அப்போது, தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று சிறுமியின் கழுத்தில் கடித்து இழுத்து செல்வதை கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுமியை தேடினர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், போலீசார் மற்றும் எஸ்டேட் நிர்வாகத்தினர் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் சிறுமி அணிந்து இருந்த ஆடை ரத்தக் கறையுடன் தேயிலை தோட்ட பகுதியில் கிடந்தது. அன்று இரவு 3 மணி வரை தேடியும் சிறுமியின் உடல் கிடைக்கவில்லை. போதிய வெளிச்சம் இல்லாததால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி

மீண்டும் காலை தேடுதல் பணி தொடங்கியது. தேடுதல் பணியில் பைரவா, வீரா ஆகிய இரு மோப்ப நாய்கள் மற்றும் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன. தேயிலை தோட்டத்தில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுமியின் உடல் கிடந்தது. சிறுமியின் பாதி உடலில் தலை மற்றும் ஒரு வலது கால் மட்டுமே இருந்தது. மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்காக் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிய வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவை பொருத்தவும், சிறுத்தையை பிடிக்க 2 கூண்டு வைத்தனர்.

கூண்டில் சிக்கிய சிறுத்தை

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஊசிமலை எஸ்டேட் பகுதியில் பணி புரிந்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அனில் அன்சாரி என்பவரின் மகள் அப்சரா (6) சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். கடந்த 9 மாதங்களில் இரு சிறுமிகளை சிறுத்தை தாக்கி கொன்றது தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இடையே நிலவி வந்த அச்சத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது வனத்துறையினர் வைக்க கூண்டில் சிறுத்தை பிடிபட்டது. இதனால் அப்பகுதி மக்கள் இடையே நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கதறியும் விடாமல் கோவை கல்லூரி மாணவியை சீரழித்த கொடூரர்களின் போட்டோ வெளியானது!
கோவையில் ஒரே நேரத்தில் 13 அரசு ஊழியர்கள் வீடுகளில் கொள்ளை! சுத்துப்போட்ட போலீஸ்! தெறித்த தோட்டாக்கள்!