ஆர்எஸ்எஸ் விழாவில் நான் பங்கேற்றேனா? வெளிப்படையாக பேசி எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

Published : Jun 23, 2025, 06:57 PM IST
S P Velumani

சுருக்கம்

ஆர்எஸ்எஸ் விழாவில் பங்கேற்கவில்லை என்று அதிமுக மூத்த தலைவர் எஸ் பி வேலுமணி விளக்கம் அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார் என்றும் கூறியுள்ளார்.

ADMK S P Velumani Denies He Did Not Participate RSS Function: அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான எஸ்.பி.வேலுமணி ஆர்எஸ்எஸ் விழாவில் கலந்து கொண்டதாக புகைப்படங்கள் வெளியாயின. ஏற்கெனவே இந்து முன்ணனி மதுரையில் நடத்திய முருகன் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் கொண்டதை திமுகவினர் விமர்சித்த நிலையில், எஸ்.பி.வேலுமணியும் ஆர்எஸ்எஸ் விழாவில் பங்கேற்றது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.

எஸ்.பி.வேலுமணி விளக்கம்

இந்நிலையில், ஆர்எஸ்எஸ் விழாவில் பங்கேற்கவில்லை என்றும் இது குறித்து தவறான தகவல் பரப்பப்படுவதாகவும் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், ''பேரூர் ஆதீனத்தில் நடைபெற்றது கொங்கு மண்டலத்திற்கு பெருமை சேர்க்கும் நிகழ்ச்சி. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசமி அடிகளார் நூற்றாண்டு நிகழ்விற்குதான் சென்றோம். ஆன்டுதோறும் சாந்தலிங்க அடிகளார் ஜீவசமாதி அடைந்த நிகழ்வில் பங்கேற்பது வழக்கம்.

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு கூப்பிட மாட்டார்கள்

ஆகவே இந்த முறையும் எங்களுக்கு அதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு எங்களை கூப்பிட மாட்டார்கள். நாங்களும் பங்கேற்க மாட்டோம். எங்களை அழைத்தது சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழாவிற்கு தான். ஆனால் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தகவல் பரப்பபடுகின்றது. மடத்தில் நடந்த நூற்றாண்டு விழாவிற்கு தான் சென்றோம். ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை'' என்று தெரிவித்தார்.

மோகன் பகவத்திற்கு வெள்ளி வேல் வழங்கியது ஏன்?

அதிமுகவும் , பாஜகவும் ஒன்றுதான் என்பதை காட்டுவதற்காக வெள்ளி முருகன் சிலையும், வெள்ளி வேலும் , மோகன் பகவத்திற்கு வழங்கப்பட்டதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த எஸ்.பி.வேலுமணி, ''அடிகளாரின் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மோகன் பகவத் அழைக்கப்பட்டு இருந்தார். அது என்னுடைய தொகுதி என்பதால் அவருக்கு முருகன் சிலை, வேல் போன்றவை பரிசாக வழங்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு எங்களை யாரும் அழைக்க மாட்டார்கள். திமுகவை மக்கள் முழுமையாக எதிர்க்கின்றனர். அதை மறைக்க சாதரணமாக ஒரு மகான் நிகழ்விற்கு செல்வதை இப்படி திரித்து சொல்கின்றனர். இது மனசாட்சி இல்லாதவர்கள் செய்கின்ற வேலை'' என்று கூறினார்.

திசை திருப்பும் திமுக

தொடர்ந்து இது தொடர்பாக பேசிய எஸ்.பி.வேலுமணி, ''திமுக அரசு மக்களிடம் தோல்வி அடைந்து விட்டது என்பதால், எதையாவது பேசி திசை திருப்பலாம் என பார்க்கின்றனர். மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்து விடுவார் என்ற பயத்தில் இப்படி கிளப்பி விடுகின்றனர். தேர்தலுக்காக பல கட்சியுடன் கூட்டணி வைப்போம். அதற்காக கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம். திமுகவின் ஆர் எஸ் பாரதி எப்பொழுதும் சிண்டு முடியும் வேலையைத்தான் பார்ப்பார். அவருக்கு வயதாகி விட்டது. அதனால் ஏதாவது ஒரு அறிக்கை கொடுத்துக் கொண்டு இருப்பார்'' என்று கூறினார்.

ஆர்.எஸ்.பாரதி கேவலமான அறிக்கை

எடப்பாடி பழனிசாமி உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக ரத்தமா? என்று ஆர் எஸ் பாரதி பேசியதற்கு கருத்து தெரிவித்த எஸ்.பி.வேலுமணி, ''முருகன் மாநாடு குறித்து கேவலமாக ஆர்.எஸ்.பாரதி அறிக்கை கொடுத்திருக்கிறார். அதிமுக எப்பொழுதும் சுயமரியாதையோடு கொள்கையை விட்டுக் கொடுக்காத இயக்கமாக இருக்கும். முருகன் மாநாட்டையும், இதையும் சம்மந்தபடுத்தி அவர் பேசியிருக்கிறார். பொய் மட்டுமே பேசுபவர் அவர். பேரூர் அதீனம் நிகழ்வுக்கு மட்டுமே சென்றேன்'' என்றார்.

எடப்பாடி பழனிசாமி கொள்கையை விடமாட்டார்

இந்து முன்னணி மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு பெரியார் , அண்ணாவை பற்றி வீடியோ போடுவது தெரியாது என்று தெரிவித்த எஸ்.பி.வேலுமணி, துணிச்சலாக தைரியமிக்க தலைவராக முடிவுகளை எடுப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் கொள்கையில் இருந்து எப்போதும் விட்டு கொடுக்க மாட்டார் என்று தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கதறியும் விடாமல் கோவை கல்லூரி மாணவியை சீரழித்த கொடூரர்களின் போட்டோ வெளியானது!
கோவையில் ஒரே நேரத்தில் 13 அரசு ஊழியர்கள் வீடுகளில் கொள்ளை! சுத்துப்போட்ட போலீஸ்! தெறித்த தோட்டாக்கள்!