கொடநாடு கொலை வழக்கில் இன்று இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிபிசிஐடி தரப்பில் கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து வழக்கு விசாரணை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை வழக்கு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் கொள்ளையடிக்க மர்ம கும்பல் உள்ளே நுழைந்த போது இடையூறாக இருந்த காவலாளி கொலை செய்யப்பட்டார். இது கொலை சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.
இதனையடுத்து அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணங்களும் ஏற்பட்டது. இந்த வழக்கை தனிப்படை போலீசார் விசாரித்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.
நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை
இந்த வழக்கு ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே இந்த வழக்கில் இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில் இன்று விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல்காதர் விடுமுறை என்பதால் இன்றைய வழக்கை குடும்ப நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் விசாரித்தார். அப்போது வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸின் மற்றொரு குழு மேற்கு வங்கத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் விசாரணையை மேலும் விரிவுபடுத்த சிபிசிஐடி போலீசார் தலைமையில் கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கு செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் விசாரணை ஒத்திவைப்பு
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறுகையில், தற்போது வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் புலன் விசாரணை குறித்து நீதிபதியிடம் எடுத்துக் கூறப்பட்டது. புலன் விசாரணை தொடர்பாக 19 செல்போன் டவர்களின் லொகேஷன்களை ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக கூறினார். இதனையடுத்து இந்த வழக்கில் கூடுதல் கால அவகாசம் கேட்ட நிலையில் வழக்கு விசாரசை செப்டம்பர் 8 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்