என்எல்சி நிறுவன முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 2ஆவது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தியும், விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்தும், என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
பாமகவின் முற்றுகை போராட்டத்தின் போது பேசிய அன்புமணி ராமதாஸ், “என்எல்சி 5 கோடி ரூபாய் கொடுத்தாலும் வேண்டாம்; நீங்கள் வெளியேறுங்கள். என்எல்சி மின்சாரம் கொடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு இருண்டு போய்விடுமா?” என கேள்வி எழுப்பினார். ஆட்சியாளர்களுக்கு மக்கள் மீதும், மண் மீதும் அக்கறை இல்லை எனவும் அப்போது அவர் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட பாமகவினரை போலீசார் கைது செய்தனர். அன்புமணி ராமதாஸை ஏற்றி சென்ற போலீஸ் வாகனத்தை மறித்து பாமகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், போலீசார் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், போலீசார் வானத்தை நோக்கி சுட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, கைதான அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “என்.எல்.சி. விவகாரம் அனைவருக்குமான பிரச்சனை. தமிழ்நாட்டின் உரிமை பிரச்சனை இது. கடலூர் மாவட்டத்தை என்எல்சி நிர்வாகம் அழித்து விட்டது. விளைநிலங்களை என்எல்சிக்காக கையகப்படுத்தக் கூடாது. என்எல்சி விவகாரத்தில் பாமக தொடர்ந்து போராட்டம் நடத்தும்.” என்றார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசு நிறுவனமான என்.எல்.சி இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தனது 2ஆவது சுரங்க விரிவாக்க பணிகளை துவங்கியுள்ளது. இதற்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் கால்வாய் அமைக்கும் பணியை அந்நிறுவனம் நேற்று முன் தினம் தொடங்கியது. ஜேசிபி எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, விளைநிலங்களில் கால்வாய் அமைக்கும் பணியில் என்.எல்.சி நிர்வாகம் ஈடுபட்டது.
ஆனால், நெற்பயிர்கள் அறுவடை நடைபெற உள்ள நிலையில், விளைநிலத்தை அழிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். என்.எல்.சி நிறுவனம் உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளதாகவும், நிலம் கையகப்படுத்தும் போது வழங்கப்பட்ட இழப்பீட்டில் ஏராளமான குளறுபடி நடந்துள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். மேலும், என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதிராக அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.
ஆனால், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் பிறகே நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மனிதாபிமான அடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட்ட பின்பும், விவசாயம் செய்ய அனுமதித்ததாகவும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் கூறுகையில், “கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தோம். இருப்பினும் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். ஆனாலும், அதற்குண்டான இழப்பீட்டையும் வழங்குவோம் என விவசாயிகளுக்குத் தெரிவித்துள்ளோம். வேளாண்மைத் துறை அமைச்சர் என்.எல்.சி நிறுவன மேலாண் இயக்குநரை நேரடியாகச் சந்தித்து ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள இழப்பீடு குறைவாக உள்ளது, எனவே அதனை உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து, அதற்கான இழப்பீட்டையும் அதிகரித்து அறிவித்துள்ளோம். சுமார் 264 ஹெக்டேர் நிலத்திற்கு அதிகமான கருணைத்தொகை வழங்குவதற்கான அறிவிப்பையும் வழங்கியுள்ளோம்.” என்றார்.