ஆனைவாரி நீர்வீழ்ச்சி சம்பவம்… அப்துல் ரகுமானுக்கு போன் போட்ட நம்மவர்…

By manimegalai aFirst Published Oct 28, 2021, 10:36 PM IST
Highlights

ஆனைவாரி சம்பவத்தில் தாய், குழந்தையை காப்பாற்றிய அப்துல் ரகுமானுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

ஆனைவாரி சம்பவத்தில் தாய், குழந்தையை காப்பாற்றிய அப்துல் ரகுமானுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

சேலம் அருகே கல்வராயன் மலை தொடர்ச்சியில் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் வசதி, குடில், பூங்கா உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. விடுமுறை தினமான கடந்த ஞாயிறன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனைவாரி நீர்வீழ்ச்சிக்கு வந்தனர்.

கல்வராயன் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் எதிரொலியாக ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் குளித்து கொண்டிருந்த பெண்,கைக்குழந்தை உள்பட 4 பேர் சிக்கிக் கொண்டனர்.

அவர்களின் அலறல் கேட்ட அங்குள்ளவர்கள் அவர்களை மீட்க போராடினர். அங்குள்ள பாறை ஒன்றின் மீது ஏறி மிகவும் கஷ்டப்பட்டு உயிரை பணயம் வைத்து தாய் மற்றும் குழந்தையை பாதுகாப்புடன் மீட்டனர். பெண்ணும், குழந்தையும் மீட்கப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

மேலும், சமூக வலைதளங்களில் அதி வேகமாக பரவி, காப்பாற்றியவர்களுக்கு பாராட்டுகளும் குவிந்தன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதுதொடர்பான வீடியோவை வெளியிட்டு காப்பாற்றியவர்களை பாராட்டினர்.

தன்னுயிர் பாராது பிறரது உயிர் காக்க துணிந்த அவர்களது தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது என்று அவர் டுவிட்டரில் தெரிவித்து இருந்தார். இந்த சம்பவத்தை கண்ட பல்வேறு கட்சி தலைவர்களும் காப்பாற்றியவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் ஆனைவாரி நீர்வீழ்ச்சி சம்பவத்தில் தாய், குழந்தையை காப்பாற்றிய அப்துல் ரகுமானுக்கு தொலைபேசி வழியாக பாராட்டு தெரிவித்து உள்ளார்.

இது குறித்து தொலைபேசியில் அவர் கூறி இருப்பதாவது: நீங்கள் வனத்துறை அதிகாரி இல்லை என்ற போதிலும் காப்பாற்றியது மகிழ்ச்சியே. அனைவருக்கும் இந்த கடமை உள்ளது. அதை நீங்கள் சரியாக புரிந்து கொண்டு துணிச்சலாக செயல்பட்டு உள்ளீர்கள்.

தாயும், சேயும் இறந்திருக்கலாம், நீங்களும் நீர்வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம். ஆனால் துணிந்து செய்திருப்பதால் அரசியலுக்கும் நீங்கள் வேண்டும், நாட்டுக்கும் வேண்டும், மேலும் வீட்டுக்கும் வேண்டும்.

பிரசவம் பார்த்த மருத்துவரை விட நீங்கள் காப்பாற்றி இருக்கும் சிசுவுக்கு உரிமை அதிகம். உங்களுக்காக ஒரு குடும்பம் காத்திருக்கிறது என்ற போதும் அதை எல்லாம்விட்டுவிட்டு காப்பாற்ற போனீர்கள். உங்களுக்கு எதுவும் ஆகவில்லை என்பதற்கு இயற்கைக்கு மிக்க நன்றி என்று கமல்ஹாசன் கூறி உள்ளார்.

click me!