மழை, வெள்ளம் பற்றி புகாரளிக்க கால் பண்ணுங்க… உதவி எண்களை வெளியிட்டது மாநகராட்சி!!

By Narendran SFirst Published Nov 7, 2021, 12:14 PM IST
Highlights

சென்னையில் மழை மற்றும் வெள்ளம் தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோவை,திருப்பூர், ஈரோடு, கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்ததது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். கே.கே.நகர், கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, எழும்பூர், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், அம்பத்தூர், செங்குன்றம் உள்பட பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிக்கிறது. சென்னை மட்டுமின்றி மேலும் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, எண்ணூர், தாம்பரம், வண்டலூர், திருமழிசை ஆகிய பகுதிகளிலும் இரவு முதல் கனமழை பெய்தது. அதே போல, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். பாதுகாப்பு கருதி சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல சுரங்க பாலங்களில் மழை நீர் புகுந்துள்ளன,  அவற்றை வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகின்றன. பல இடங்களில் நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரே நாளில் 20.செ.மீ அதிகமாக மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 162 மிமீ மழையும் நுங்கம்பாக்கத்தில் 145 மிமீ மழையும், புழல் பகுதியில் 111 மிமீ மழையும், மீனம்பாக்கத்தில் 4.8 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் இந்த மழை காரணமாக சென்னையில் உள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன. இதை அடுத்து புழல் ஏரி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் நிரம்பியதை அடுத்து, கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழை, வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் மழை மற்றும் வெள்ளம் தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்களையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9445477205 என்ற வாட்ஸ் ஆப் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு தொடர்பு கொண்டு மழை வெள்ளம் மற்றும் மரம் விழுந்துள்ளது தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

click me!