வளி மண்டலத்தில் அதிக அழுத்தம்… அடுத்த ஒரு வாரத்துக்கு தமிழகத்தில் கடும் குளிருடன் பனி மூட்டம் வாட்டி எடுக்கும் …

By Selvanayagam PFirst Published Jan 7, 2019, 11:11 AM IST
Highlights

வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள அதிக அழுத்தம் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்துக்கு கடும் குளிருடன் பனி மூட்டம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குளிர் பிரதேசங்களில் தற்போது உறைபனியும், கடும் குளிரும் அதிகரித்துள்ளது. கொடைக்கானலில் நேற்று காலை 5.8 டிகிரி செல்சியஸாக குறைந்தது. கடந்த ஆண்டு இதே நாட்களில் கொடைக்கானலில் 7 டிகிரி செல்சியஸ் மட்டுமே வெப்பநிலை நிலவியது.

தற்போது நிலவும் கடுங்குளிரை வெளிநாட்டினர் ரசிக்கின்றனர். உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் குளிருக்குப் பயந்து தற்போது கொடைக்கானல் வருவதில்லை. கொடைக்கானலில் குளிர் என்பது கூடுவதோ, குறைவதோ வழக்கமானதாகத்தான் இருக்கும்.

ஆனால், மதுரை போன்ற வெப்ப நகரங் களில்கூட தற்போது உறைபனியும், குளிரும் மக்களை குளிர்ப்பிரதேசங்களைப் போல் நடு நடுங்க வைக்கிறது. வழக்கமாக மதுரையில் கோடை காலங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக கடுமையாகவும், குளிர் காலங்களில் சராசரி குளிரும் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக கடந்த   மார்கழி முதல் நாள் முதல் கொடைக்கானல், ஊட்டியை போல் அதிகாலை நேரங்களில் உறைபனியும் கடும் குளிரும் மக்களை நடுக்கம் கொள்ள வைக்கிறது.

அதன் உச்சமாக கடந்த ஒரு வாரமாக அதிகாலை, இரவு நேரங்களில் மக்கள் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு உறைபனி எலும்பை ஊடுறுவுகிறது. இதேபோன்று, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கடும் குளிர் காணப்படுகிறது.

வயல் வெளிகளில், செடி, கொடிகள் பனியில் உறைந்து கிடக்கின்றன. அதிகாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் வாகனங்கள் சாலைகளில் குளிர்ப் பிரதேசங்களைப் போல் முகப்பு விளக்குகளை எரிய விட்டுச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. குளிர் காற்றால் இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியவில்லை. பஸ்களில் கண்ணாடி ஜன்னல்களை மூடினால் கண்ணாடியை ஊடுறுவிக்கொண்டு குளிர் காற்றும், பனியும் பயணிகளை வாட்டி வதைக்கிறது. இரவில் பயணம் செய்வோர் அவதிப்படுகின்றனர். சிலர் குளிருக்குப் பயந்து இரவு நேரப் பயணத்தையே தவிர்க்கின்றனர்.

இதுகுறித்து காமராசர் பல்லைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளம் துறைத் தலைவர் பேராசிரியர் கே.முத்துச்செழியன் கூறுகையில், ‘‘மதுரை நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடந்த     சில நாட்களாக 10 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு குளிரும், பனியும் அதிகரித்துள்ளது. காலை வேளைகளில் பனி உறை வெப்பம் 14 டிகிரி செல்சியஸாகவும், வெளி வெப்பம் 17 டிகிரி செல்சியஸாகவும் உள்ளது,’’ என்றார்.

கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி குமரவேல் கூறியதாவது: கொடைக்கானலில் இதுவரை ஜீரோ டிகிரி செல்சியஸை தொடவில்லை. நேற்று  காலை 5.6 டிகிரி செல்சியஸாக குறைந்தது. குளிரில் இரண்டு வகை இருக்கிறது. ப்ரிட்ஜ், ஏசியில் இருக்கும் குளிர் ஒரு வகை. அதில், காற்றின் ஈரப்பதம் சரியாக இருக்கும். அதேநேரத்தில் தற்போது மார்கழி மாதம் வீசும் குளிர் காற்று மற்றொரு வகை. இந்தக் காற்றை அந்தக் காலத்தில் மக்கள் விஷ காற்று என்பார்கள். இந்தக் காற்றில் ஈரப்பதம் இருக்காது. மிக குறைவாக இருக்கும். இந்த குளிரே தற்போது அடிக்கிறது.

ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 11 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் குளிர் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. ஈரப்பதம் இல்லாத இந்தக் குளிரும், மழைக்காலத்தில் வீசும் அந்தக் குளிரும் ஒரே மாதிரியாகத்தான் நம்மால் உணர முடியும். ஆனால், இரண்டும் ஒன்றில்லை. ஊட்டி, கொடைக்கானல் மக்கள் தற்போது குளிரில் நடுங்குவார்கள். குளிர் கடுமையாக இருந்தால் அவர்கள் முகம் வெளுத்து இருக்க வேண்டும் அல்லவா? ஆனால், ஈரப்பதம் இல்லாததால் முகம் கருமையடைந்து விடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 6  நாட்களுக்கு அதாவது பொங்கல் தினம் வரை  கடும் குளிருடன் பனிமூட்டம் நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!