கல்லூரி மாணவிகளுக்கு வாட்சப்பில் 'ஆபாச' மெசேஜ்... 'பாலியல்' தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது…

By manimegalai aFirst Published Nov 22, 2021, 9:16 AM IST
Highlights

கோவையில் மாணவிகளுக்கு வாட்சப்பில் பாலியல் தொல்லை கொடுத்த, அரசு கல்லூரி பேராசிரியர் ரகுநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கோவை அரசு கலைக்கல்லூரியில் பேராசியராக பணிபுரிந்து வருபவர் ரகுநாதன். இவர் பி.பி.ஏ  துறையின்  தலைவராக (HOD) பணியாற்றி வந்தார். இவர் தன்னுடைய வகுப்பில் படிக்கும் கல்லூரி மாணவிகளுக்கு, தனது செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் மூலம் ஆபாச தகவல் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த தாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு மாணவர் அமைப்புகள் சார்பில் கல்லூரி முன்பு போராட்டங்கள்  நடத்தப்பட்டது.

அத்துடன் பேராசிரியர் ரகுநாதன் மீது கலெக்டர் அலுவலகம் மற்றும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர் மாணவர்கள். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், பேராசிரியர் ரகுநாதன் மீது கடத்தல், கொலைமிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) வழிகாட்டுதல்படி பேராசிரியர் ரகுநாதன் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க கல்லூரி முதல்வர் கலைசெல்வி, விசாரணை குழு அமைத்தார்.

 இந்த குழுவினர் கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் சக பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பேராசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இது குறித்த அறிக்கை மாநில கல்லூரி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து கல்லூரி இயக்குனர் பூர்ண சந்திரன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் ரகுநாதனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட  பேராசிரியர் ரகுநாதன்,  தற்போது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கிளை சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

click me!