சரசரவென சரிந்த மாம்பழம் விலை.! ஒரு டன் இவ்வளவு தானா.? அரசுக்கு அன்புமணி அலர்ட்

Published : Jun 04, 2025, 11:08 AM IST
totapari mango uses and taste profile

சுருக்கம்

மாம்பழ விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், உழவர்களுக்கு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

Mango prices fall in Tamil Nadu : கோடை காலம் என்றாலே மாம்பழம் சீசன் தான், பொதுமக்கள் வீடுகளுக்கு பை நிறைய வாங்கி செல்வார்கள். அதற்கு ஏற்றார் போல மாம்பழத்தின் விலையும் சரிந்துள்ளது. அந்த வகையில் தரத்தை பொறுத்து ஒரு கிலோ 50 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாம்பழம் விலை சரிவை சந்தித்துள்ளது. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக அளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் அதிகரித்த மாம்பழம் விளைச்சல்

சேலத்து மாம்பழம் என்று போற்றப்படும் மாம்பழ வகைகள் இந்த மாவட்டத்தில் தான் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. நடப்பாண்டில் மாம்பழங்கள் விளைச்சல் அதிகமாக இருந்ததால், வழக்கத்தை விட சற்று கூடுதல் லாபம் கிடைக்கும் என்று நினைத்திருந்த உழவர்களுக்கு மாம்பழ விலை வீழ்ச்சியால் பெரும் ஏமாற்றம் தான் பரிசாகக் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டில் ஒரு டன் மாம்பழம் சராசரியாக ரூ.22 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இம்முறை ஒரு டன் மாம்பழத்தின் சராசரி விலை ரூ.4,000 ஆக வீழ்ச்சி அடைந்து விட்டது. பல இடங்களில் இந்த விலைக்கு கொள்முதல் செய்வதற்கு வணிகர்களோ, மாம்பழக்கூழ் ஆலைகளோ முன்வரவில்லை.

ஒரு டன் மாம்பழத்தை ரூ. 4 ஆயிரத்துக்கு விற்பனை செய்தால் உழவர்களுக்கு எந்த இலாபமும் கிடைக்காது; மாறாக ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாக இழப்பு ஏற்படும். இந்த இழப்பை உழவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. மாம்பழங்களின் விலை வீழ்ச்சிக்கு உற்பத்தி அதிகரிப்பு மட்டுமின்றி, மேலும் பல காரணங்களும் கூறப்படுகின்றன. அவற்றில் முதன்மையானது மாம்பழம் கொள்முதல் செய்யும் மொத்த வணிகர்கள் தங்களுக்குள் ரகசியக் கூட்டணி அமைத்து கொள்முதல் விலையை குறைத்துள்ளனர்.

விவசாயிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம்

 இது தவிர, சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருப்பதால் அவை மாம்பழங்களை கொள்முதல் செய்ய மறுப்பது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதில் புதிதாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஆகியவையும் சிக்கலுக்கு காரணம் ஆகும்.

இந்த சிக்கல்களை சரி செய்ய வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை ஆகும். ஆனால், மாம்பழங்களின் விலை வீழ்ச்சியை சமாளிக்க இரு அரசுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு கொள்முதல் விலை நிர்ணயிக்கவும், கொள்முதல் செய்யவும் தனித்தனி அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தமிழக அரசு உடனடியாக மாம்பழ உழவர்கள், வணிகர்கள் மற்றும் மாம்பழக்கூழ் ஆலைகளின் உரிமையாளர்களை அழைத்துப் பேசி மாம்பழங்களுக்கு கட்டுபடியாகும் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். மாம்பழங்கள் மற்றும் மாம்பழக்கூழை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் உள்ள தடைகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்கள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!