
கோயம்புத்தூர் புத்தக கண்காட்சி : இயந்திர வாழ்க்கைக்கு ஈடாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு இளைப்பாறும் பூஞ்சோலையாக புத்தக கண்காட்சி உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புத்தக கண்காட்சியானது அவ்வப்போது நடத்தப்படும். இதில் சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இருக்கும். அதே அளவிற்கு மக்களின் வரவேற்பை பெறும் புத்தக கண்காட்சி தான் கோவையில் நடைபெறும் புத்தக கண்காட்சியாகும், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட புத்தக கண்காட்சியை விட இந்த முறை பல லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில் சங்கம் இணைந்து நடத்தும் 9-வது கோயம்புத்தூர் புத்தக கண்காட்சியானது ஜூலை 18-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்படுள்ளது. இதற்கான சின்னம் வெளியிட்டு நிகழ்வு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் கொடிசியா அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்று லோகோவை வெளியிட்டனர். கோவை புத்தக கண்காட்சியில் 280- க்கு மேற்பட்ட அரங்குகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கும்,விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் இளம் படைப்பாளர்களுக்கான பயிற்சிகளும் விருதுகளும் அளிக்கப்பட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்கள் இந்த புத்தக கண்காட்சிக்கு வந்து செல்வதற்கு இலவச பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும் கூறினார். இந்த புத்தக கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்றும் பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கியம் சார்ந்த சாதனை படித்துள்ள சான்றோர்களுக்கு தகுதியான ஒருவரை தேர்ந்தெடுத்து வாழ்நாள் சாதனையாளர் விருதும், ஒன்றரை லட்சம் ரூபாய் பரிசும்,பாராட்டும் மடலும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் எழுத்தாளர்கள் படைப்புகளை சமர்ப்பிக்க கடைசி தேதி ஜூன் 15ஆம் தேதி என்றும் குறும்பட போட்டிக்கு சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜூன் 30 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.