தமிழகத்தில் முழு ஊரடங்கா? மருத்துவ குழு பரிந்துரைத்தது என்ன? பரபரப்பில் தலைமை செயலகம்!!

By Narendran SFirst Published Jan 10, 2022, 4:19 PM IST
Highlights

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மருத்துவகுழுவினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். 

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மருத்துவகுழுவினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். கொரோனா பரவத் தொடங்கியதை அடுத்து அனைத்து பகுதிகளிலு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு, ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை சற்று குறைந்ததை அடுத்து கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. கடந்த ஒரே வாரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சென்னையில் மட்டும் ஒருநாள் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

தொற்று குறையும் வரை இனி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மற்ற நாட்களில் தியேட்டர்கள், பேருந்துகளில் 50% அனுமதி, பள்ளிகள் மூடல் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தக் கட்டுப்பாடுகள் இன்றுடன் நிறைவடையும் நிலையில் அவற்றை நீட்டிக்கலாமா, அதிகரித்து வரும் தொற்றை  கட்டுப்படுத்த மேலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலர் இறையன்பு, உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தியேட்டர்களில் 50% பார்வையாளர்கள் அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் அப்படியே தொடரலாம். பூஸ்டர் தடுப்பூசி, 15- 18 வயது பிரிவினருக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். வரும் 16ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு தேவையில்லை. இதுபோன்ற பல்வேறு ஆலோசனைகளை மருத்துவக் குழு வழங்கியுள்ளது. ஏற்கெனவே சௌம்யா சுவாமிநாதன், முழு ஊரடங்கு தேவை இல்லை என கூறியிருந்தார். நேற்று ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், முழு ஊரடங்கு போட அரசுக்கு எண்ணமில்லை என்று தெரிவித்தார். இருந்த போதிலும் கொரோனா அதிகரித்து வருவதால் மருத்துவ குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊரடங்கு விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!