பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் 300 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த சிறப்பு மாணவருக்கு அரசு பள்ளிகள் சீட் மறுப்பதாக அந்த மாணவரின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றன. பொதுத்தேர்வை சுமார் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய நிலையில், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதில், ஒட்டுமொத்தமாக 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் 300 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த சிறப்பு மாணவருக்கு அரசு பள்ளிகள் சீட் மறுப்பதாக அந்த மாணவரின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை செட்டிவீதியை சேர்ந்த வரலட்சுமி என்பவரின் மகன் சிறப்பு குழந்தை. இவர் கோவை காந்திபார்க, சலிவன் வீதியில் உள்ள மாரண்ண கவுண்டர் உயர்நிலை பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சிறப்பாக படித்து கடந்த 10ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வில் ஆசிரியர்களின் உதவியுடன் தேர்வெழுதி 300 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து மேல்நிலை கல்வியான பதினொன்றாம் வகுப்பில் சேர்க்க கோவையில் உள்ள அரசு பள்ளிகளை அணுகியபோது சீட் கொடுக்க அவர்கள் மறுத்துள்ளதாக தெரிகிறது. எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது தாயார் மனு அளித்துள்ளார்.
தலித் தம்பதியர் கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்: மத்தியப்பிரதேசத்தில் கொடூரம்!
இதுகுறித்து அந்த மாணவரின் தாய் வரலட்சுமி கூறுகையில், “எனது மகனை 11ஆம் வகுப்பில் சேர்க்க அரசு பள்ளிகள் மறுப்பு தெரிவிக்கின்றன. சில அரசு பள்ளிகளில் உங்கள் மகனை தனியார் பள்ளியில் படிக்க வையுங்கள் என்று மனசாட்சி இல்லாமல் பேசுகின்றனர். தனியார் பள்ளிகளில் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை செலவாகும் என்கிறார்கள். எங்களுக்கு அந்த அளவிற்கு வசதி வாய்ப்புகள் இல்லை.” என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.
இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும், அனைத்து திறமைகளும் கொண்ட தனது மகனுக்கு பதினொன்றாம் வகுப்பு படிக்க மாவட்ட ஆட்சியர் உதவி புரிய வேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டுக்கொண்டார். மாணவர்களின் கல்விக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக அரசு, சிறப்பு மாணவரின் விஷயத்தில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.