
சென்னையில் உள்ள ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கும் மக்கள் அதிக மழையின் காரணமாக ரயில் நிலைய வாசலில் படுத்திருந்தனர். இந்நிலையில் இன்று மே மாதம் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு, அடையாளம் தெரியாத ஒரு நபர் அங்கு படுத்து இருந்தவர்கள் மீது ஆசிட் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
மேலும் இந்த ஆசிட் வீச்சு சம்பவத்தில் ரயில் நிலைய வாசலில் படுத்திருந்த ஒரு குழந்தை உட்பட ஐந்து பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் அறிந்து உடனடியாக அப்பகுதிக்கு வந்த போலீசார் காயமடைந்த குழந்தை உள்பட ஐந்து பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஆசிட் வீசி சென்ற மர்ம நபர் யார் என்று தற்பொழுது விசாரணை நடந்து வருகிறது. மேலும் விசாரணையில் அந்த ஆசிட் பாட்டில் நேரடியாக அவர்கள் மீது விழவில்லை என்றும், அதனால் தான் பெரிய அளவில் யாருக்கும் காயம் இல்லாமல் தப்பி உள்ளார்கள் என்றும் போலீசார் கூறியுள்ளனர். மர்ம நபரை கண்டுபிடிக்க CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்படவுள்ளது.