மக்களை பயமுறுத்த திமுக பொய் பிரசாரம் செய்கிறது – பி.ஆர்.சுந்தரம் எம்.பி. குற்றச்சாட்டு…

First Published Oct 16, 2017, 8:40 AM IST
Highlights
DMK spread false propaganda to threaten people - br.Sunderam MP ...


நாமக்கல்

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசுப் போதிய முயற்சிகள் எடுத்து வருகிறது. ஆனால், திமுக மக்களிடம் பீதியை ஏற்படுத்த பொய் பிரச்சாரம் செய்து வருகின்றது என்று எம்.பி. பி.ஆர்.சுந்தரம் குற்றம் சாட்டினார்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது.

நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிலவேம்பு குடிநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிட நாமக்கல் மாவட்டத்திர்கு ரூ.25 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, அந்த நிதியிலிருந்து ஆங்காங்கே முகாம்கள் நடத்தி நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இராசிபுரம் பகுதியில், மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, காக்காவேரி, ஆண்டகளூர் கேட் ஆகிய பகுதியில் நேற்று மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதில், நாமக்கல் எம்பி. பி.ஆர்.சுந்தரம் மக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார்.

பின்னர், பி.ஆர்.சுந்தரம் பேசியது:

“டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசுப் போதிய முயற்சிகள் எடுத்துவரும் நிலையில், திமுக கட்சியினர், மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் வகையில் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நோய்க் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், இராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு ஆகிய ஐந்து தொகுதிகளில் நிலவேம்பு குடிநீர் தயாரித்து வழங்கிட ரூ.25 இலட்சமும், சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு ரூ.10 இலட்சம் என மொத்தம் ரூ.35 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிலவேம்பு குடிநீரை மக்கள் பருகி, நோய் பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்வதுடன், சுற்றுப்பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் மணிவண்ணன், மாவட்ட ஊராட்சிச் செயலர் பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆ. தனபால், மீராபாய், வட்டார மருத்துவ அலுவலர்கள் கே.செல்வி, பாலாமணி, இராசிபுரம் வட்டாட்சியர் ந.ரத்தினம், சித்த மருத்துவர் செங்குட்டுவேல், நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் இ.கே.பொன்னுசாமி உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

click me!