வன்முறையும் அட்டகாசமும் செய்வதற்கு ஒரு கட்சி பிறந்து இருக்கிறது என்றால் அது திமுக தான் என கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கை யை அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, 'கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கான தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கியமான 100 வாக்குறுதிகளை பதவியேற்று 500 நாட்களில் நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தார். அதன்படி சர்வதேச விமான நிலையமாக கோவை விமான நிலையம் மாற்றப்படும், மெட்ரோ பணிகள் துரிதப்படுத்தப்படும், ஐ.ஐ.எம் (IIM) கல்வி நிறுவனம் கோவையில் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் கோவை சர்வதேச அளவில் தனித்துவமிக்க பகுதியாக உருவாக்கப்படுவதோடு, கோவையில் உள்ள தற்போதைய பிரச்சனைகள் மற்றும் வரும் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, கோயம்புத்தூர் தொகுதியில் மக்கள் மத்தியில் பாஜகவிற்கு இருக்கும் ஆதரவை பார்த்து திமுகவினர் பயந்துள்ளனர். அதனால் தன் மீது பொய் வழக்குகளை பதிந்து வருகின்றனர்.
நேற்றைய பிரச்சாரத்தில் இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி அனுமதிக்கப்பட்ட இடங்களில் இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி இல்லாமல் மக்களிடம் பேசுவதற்கு அனுமதி உண்டு. எப்பொழுதுமே திமுகவினர் கட்டு போட்டுக்கொண்டு மருத்துவமனையில் படுப்பது சகஜம் தான். திமுகவிற்கு கோவை பாராளுமன்ற தொகுதியில் டெபாசிட் கிடைக்காது. தமிழ்நாடு முழுவதும் வன்முறையும், அட்டகாசமும் செய்வதற்கு ஒரு கட்சி பிறந்து இருக்கிறது என்றால் அது திராவிட முன்னேற்ற கழகம் தான்.
தமிழகத்தில் இனி உதயசூரியன் உதிக்கக்கூடாது; ஓசூரில் நிர்மலா சீதாராமன் பேச்சு
தோல்வி பயத்தை திராவிட முன்னேற்றக் கழகம் இப்பொழுதே ஒப்புக்கொண்டு விட்டார்கள். மத்திய பாஜக தேர்தல் அறிக்கைக்காக காத்திருக்கின்றோம். அது வந்தவுடன் மாநில தேர்தல் அறிக்கை வேகமாக வெளியிடப்படும். பாஜக ஊழல் என கியூ ஆர் கோடு வைத்து திமுகவினர் போஸ்டர் ஒட்டுகிறார்கள். அவர்களை பார்க்கும் பொழுது மூளை இல்லாதவர்களாக பார்க்கிறேன். அவர்களை எல்கேஜி சேர்க்க வேண்டும் என்று பார்க்கிறேன். அமித்ஷா சிவகங்கையில் சிறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மதுரையில் ரோட் ஷோவில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகரில் பிரசாரம் செய்து அதன் பிறகு திருவனந்தபுரத்திற்கு செல்கிறார் என அண்ணாமலை தெரிவித்தார்.