திமுக எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் குறித்து தரக்குறைவாக பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மீது திமுக வழக்கறிஞர் அணியினர் புகார் அளித்துள்ளனர்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்களை மே 30ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் அக்கட்சி நடத்தியது. அந்த வகையில், கடந்த மாதம் 29ஆம் தேதி வி.கே.கே மேனன் சாலையில் நடைபெற்ற பாஜக சாதனை விளக்கக் கூட்டத்தில் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய வானதி சீனிவாசன், திமுக எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் குறித்து தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. “திமுக கவுன்சிலர் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஒரு வீட்டில் இருக்க மாட்டார்கள், திமுகவிற்காக ஒரு பண்பாடு வைத்துள்ளார்கள். அவர்கள் காலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள் மாலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள். அது அவர்களின் ஜீன்.” என வானதி சீனிவாசன் பேசியதாக தெரிகிறது.
உள்நோக்கம் ஏதுமில்லை; இனி அந்த தவறு நடக்காது - திருமாவளவன் விளக்கம்!
இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவராக இருக்கும் வானதி சீனிவாசன், இதுபோன்று தரக்குறைவாக, கொச்சையாக பேசியதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் குறித்து தரக்குறைவாக பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மீது திமுக வழக்கறிஞர் அணியினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக வழக்கறிஞர்கள் அணியினர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், கோவை மாவட்டம் முழுவதும் திமுக பகுதி நிர்வாகிகள் அந்தந்த காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து திமுகவை சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தரக்குறைவாக பேசினார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுக்கு வானதி சீனிவாசனும் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். இதையடுத்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதுடன், கைதும் செய்யப்பட்டார்.
அதன்படி, மக்கள் பிரதிநிதிகள் குறித்து கொச்சையாக பேசிய வானதி சீனிவாசன் மீது பாஜக நடவடிக்கை எடுக்குமா? குஷ்புவுக்கு ஆதரவாக களமாடியவர்கள் வானதி சீனிவாசனின் பேச்சை கண்டிக்காது ஏன் என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.