பெரம்பலூரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திடீர் ஆய்வு...

First Published Oct 17, 2017, 7:26 AM IST
Highlights
Dengue Fever Prevention In Perambalur


பெரம்பலூர்

செட்டிகுளம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார் பெரம்பலூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் அபூர்வ வர்மா.

சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலரும், பெரம்பலூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலருமான அபூர்வ வர்மா, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்கு உள்பட்ட செட்டிகுளம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்

இந்த ஆய்வின்போது, “டெங்கு கொசு பரவாமல் இருக்க மாவட்டத்தில் சிறப்புக் குழுக்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால், அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

மேலும், டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏ.டி.எஸ் கொசுக்களை ஒழிக்கும் முறைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, செட்டிக்குளம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.

பின்னர், செட்டிக்குளம் வடக்கு மற்றும் தெற்குத் தெருப் பகுதிகளுக்குச் சென்று அப்பகுதிகளில் உள்ள மக்களிடம் டெங்கு நோய் பரவாமல் இருப்பதற்கு சுற்றுப்புறங்களை தூய்மையாக பேணி பாதுகாக்கவும், தண்ணீர் பிடித்து வைக்கும் பாத்திரங்களை அவ்வப்போது பிளீச்சிங் பொடி மூலமாக சுத்தம் செய்து, அவற்றை மூடி வைக்கவும், கொசுக்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள கொசுவலை, கொசு விரட்டிகளை பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சம்பத், ஊராட்சிகள் உதவி இயக்குநர் லோ.பாலன், வட்டாட்சியர்கள் சீனிவாசன் (ஆலத்தூர்), பாலகிருஷ்ணன் (பெரம்பலூர்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி. தயாளன், இளங்கோவன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

click me!