கோவை மாணவி தற்கொலை விவகாரம்… டி.ஆர்.பிகாக அத்துமீறும் டிவி சேனல்கள்... இதுவும் பாலியல் சீண்டல்தான்!!

By Narendran SFirst Published Nov 14, 2021, 2:17 PM IST
Highlights

#Covaigirlsucide ஊடகங்கள் உயிரிழந்த கோவை மாணவியின் ஊர், வீடு, பெயர், பெற்றோர் போன்ற அடையாளங்களை காட்டுவது சட்டப்படி கடும் குற்றம் என்றும் இது மாணவியின் மாண்பு மற்றும் அவரது குடும்பத்தாரின் மாண்பை சிதைக்கும் என்றும் குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த மாணவி கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுக்குறித்து அவரது பெற்றோர் கேட்டபோதும் ஒன்றும் இல்லை என கூறியுள்ளார். மேலும் தான் பயிலும் பள்ளியில் படிப்பை தொடர விருப்பமில்லை என அவர் பெற்றோரிடம் கூறி வேறு பள்ளியில் அவரை சேர்த்துவிடுமாறும் கேட்டுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் அந்த சிறுமியை ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சேர்த்துள்ளனர். இதனிடையே வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கடந்த 11ஆம் தேதி அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மாணவிக்கு சின்மயா பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததும் அவரது தொல்லை தாளாமல்தான் அந்த மாணவி வேறு பள்ளிக்கு டிசி வாங்கிக் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து வேறு பள்ளிக்குச் சென்ற பின்னரும் அந்த மாணவியை விடாமல் மிதுன் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுக்குறித்து பாதிக்கப்பட்ட மாணவி ஏற்கனவே புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் பேருந்தில் யாராவது இடித்துவிட்டது போல் இதை கடந்த போ என கூறியதாக பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து மிதுனையும் பள்ளி முதல்வரையும் கைது செய்யக்கோரி சக மாணவிகள், அவர்களது பெற்றோர், இறந்த மாணவியின் பெற்றோர், உறவினர், சமூக ஆர்வலர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து  ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அது போல் பாலியல் குற்றத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்தது. அதை தொடர்ந்து அவர் தலைமறைவு ஆனார். இதை அடுத்து தனிப்படை போலீஸார் அவரை தீவிரமாக தேடிய நிலையில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூருவில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீஸார் அவரை சுற்றி வளைத்து கைது செய்து அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சமூக ஊடங்களிளும் தொலைக்காட்சிகளிளும் செய்திகள் போடப்பட்டன. அப்போது பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் மற்றும் அவரது புகைப்படம் போன்ற விவரங்களை வெளியிட்டனர்.

இந்த செயல் உயிரிழந்த மாணவியின் மாண்பை சிதைக்கும் என குழந்தைகள் நல ஆர்வலரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான தேவநேயன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், காஷ்மீரில் நடைபெற்ற கத்துவா சம்பவத்திற்கு பிறகு பாலியல் வன்முறையால் ஒரு குழந்தை இறந்தால் கூட அந்த குழைந்தையின் பெயரோ, அடையாளங்களையோ காட்டாக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்த வகையில் கோவை மாணவியும் பாலியல் வன்முறை காரணமாக தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த நிலையில் அந்த மாணவியின் புகைப்படத்தையும் பெயரை திரும்ப திரும்ப போடுவது அந்த மாணவியை மீண்டும் மீண்டும் பாலியல் வன்முறை செய்வதற்கு சமம். மேலும் உயிரிழந்த மாணவியின் மாண்பு மட்டுமின்றி அவரது குடும்பத்தினரின் மாண்பும் சிதைக்கப்படும். ஊடகங்கள் உயிரிழந்த கோவை மாணவியின் ஊர், வீடு, பெயர், பெற்றோர் போன்ற அடையாளங்களை காட்டுவது சட்டப்படி கடும் குற்றம். சட்டத்தை கடந்து நம் வீட்டு பெண்ணுக்கு இது நேர்ந்தால் இப்படிதான் செய்வோமா என்ற எண்ணமாவது ஊடகங்களுக்கு வர வேண்டும். அந்த பெண்ணுக்கு நீதி கேட்டு நடைபெறும் போராட்டங்களை கையாளும்போது கூட இறந்த மாணவியின் மாண்புக்கு இழிவு ஏற்படாதபடி பார்த்துக்கொள்வது ஊடகங்களின் கடமை. இவ்வாறு தெரிவித்தார். 

click me!