மொழிபெயர்ப்பு ஊக்கத்தொகையாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்... அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

By Narendran SFirst Published Jan 18, 2023, 11:15 PM IST
Highlights

மொழிபெயர்ப்பு ஊக்கத்தொகையாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மொழிபெயர்ப்பு ஊக்கத்தொகையாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நிறைவு விழாவில் பேசிய அவர், தொழில் வளர்ச்சியில் உலகளாவிய கவனத்தை தமிழ்நாடு ஈர்த்தது. அடுத்ததாக, செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலமாக தமிழ்நாடு உலகளாவிய புகழைப் பெற்றது. புத்தகப் பதிப்பிலும் உலகளவில் தனது சிறகை தமிழ்நாடு விரித்திருக்கிறது. இதை நினைக்கும்போது உள்ளபடியே பெருமையாகவும், பூரிப்பாகவும் இருக்கிறது. கடந்த 6 ஆம் தேதி இதே மைதானத்திற்கு வந்து புத்தகக் கண்காட்சியைத் நான் திறந்து வைத்தேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனைக் கடைகள் இங்கு இடம்பெற்று, ஒரு வார காலமாகப் புத்தக விற்பனையைச் செய்து வருகின்றன. இது 46வது சென்னை புத்தகக் கண்காட்சி. இந்த 46 ஆண்டுகளில் இல்லாத ஒன்று இந்த ஆண்டு தொடங்கி இருக்கிறது. அதுதான் பன்னாட்டு புத்தகக் காட்சி. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும். இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும். மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்ற கவிதை வரிகளை மகாகவி பாரதியார் எழுதி 120 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இதையும் படிங்க: தற்காலிக ஆசிரியர்களின் பணிக்காலம் நீட்டிப்பு... உத்தரவு பிறப்பித்தது பள்ளிக் கல்வித்துறை!!

மகாகவியின் கனவை நிறைவேற்றும் வகையில் இந்தப் பன்னாட்டு புத்தகக் காட்சியானது நடைபெற்று வருகிறது. பதிப்புத்துறை பெரிதும் வளராத காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையையும், எங்கெல்ஸ், லெனின், அண்ணல் அம்பேத்கார் உள்ளிட்ட பல அறிஞர்களுடைய நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார். உலக அறிவையும், விரிவையும் தமிழர்களுக்குத் தமிழிலேஅளிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அத்தகைய முன்னோடிகளின் கனவை நிறைவேற்றும் காட்சிதான் இந்தப் பன்னாட்டு புத்தகக் காட்சி. தமிழ்நாட்டில் தமிழாட்சி நடக்கும்போது, இது போன்ற பன்னாட்டுப் புத்தகக் காட்சிகள் நடத்துவது ஒன்றும் வியப்பல்ல. இலக்கியச் செழுமை மிக்க நமது தமிழ்ப் படைப்புகளை உலகமெல்லாம் கொண்டு சேர்க்கவும், உலகெங்கிலும் உள்ள சிறந்த அறிஞர்களின் அறிவு செறிந்த படைப்புகளைத் தமிழில் கொண்டு வரவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. தந்தை பெரியார் ஓர் உலகத் தலைவர். அவரது சிந்தனைகள் உலகம் முழுவதும் பொருந்தக் கூடியவை. உலகம் முழுமைக்கும் பொதுவானவை. அத்தகைய பெரியாரின் சிந்தனைகளை உலக மொழிகளையும், இந்திய மொழிகளையும் உள்ளடக்கி 21 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட இருக்கிறோம்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் எதிரொலி... அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்!! 

அதற்கான அடிப்படைப் பணிகள் தொடங்கி இருக்கின்றன. தமிழ் நூல்களை ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியிட்டுள்ளோம். பல்வேறு மொழிகளிலும் உள்ள நூல்களை தமிழில் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளோம். மொழிபெயர்ப்பு ஊக்கத்தொகையாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இந்தப் பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேகமாக நடைபெற்று வருகின்றன. இவற்றுக்கெல்லாம் மகுடம் சூட்டக்கூடிய வகையில் இந்த பன்னாட்டு புத்தகக் காட்சியை சென்னையில் தொடங்கி இருக்கிறோம். உலகளாவிய அளவில் ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, சீனா ஆகிய நாடுகளில் நடைபெறும் இது போன்ற புத்தகக் காட்சியானது, இப்போது சென்னையில் தொடங்கி இருக்கிறது. இதனை ஆண்டுதோறும் நடத்தி, மிகப்பெரிய அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதைப் பள்ளிக் கல்வித் துறைக்கு விரும்புகிறேன். என்னுடைய வேண்டுகோளாக எடுத்துவைக்க நான் எப்போது தரமான நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறதோ அப்போது நம்முடைய மொழியும் வளம் பெறும். சொற்களும் வலிமை பெறும் என்று தெரிவித்தார். 

click me!