நின்ற கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் !! அதிகாலையிலேயே குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் !!

By Selvanayagam PFirst Published Aug 1, 2019, 7:14 AM IST
Highlights

ஜுலை 1 ஆம் தேதி முதல் சயன கோலத்தில் காட்சி தந்த அத்திவரதர் இன்று முதல் அடுத்த 18 நாட்களுக்கு நின்ற வண்ணம் காட்சி தருகிறார். இதையடுத்து இன்று அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளும் அருளாளர் அத்தி வரதர் தற்போது காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு கார்சி அளித்து வருகிறார்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் அத்திவரதர் சயன(படுத்த நிலையில்) கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார். 

அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக சென்னை மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் நாளுக்கு நாள் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் வெள்ளத்தில் காஞ்சீபுரம் திக்குமுக்காடி வருகிறது.

31-வது நாளான நேற்று அத்திவரதர், மஞ்சள் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுமார் 3 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்தனர். 
அத்திவரதர், பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சி அளிப்பது நேற்றுடன் நிறைவடைந்தது. அத்திவரதரை சயன கோலத்தில் இதுவரை 48 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 

இந்நிலையில் இன்று முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். சயன கோலத்தில் இருக்கும் அத்திவரதரை நின்ற கோலத்தில் மாற்றுவதற்கு வசதியாக நேற்று மாலை 5 மணிக்கு மேல் அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. தரிசனம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இன்று அதிகாலை முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். இதையடுத்து அத்தி வரதரைக் காண அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஏற்கனவே சயன கோலத்தில் தரிசனம் செய்த பக்தர்களும் நின்ற கோணத்தில் அத்திவரதரை காண்பதற்காக வருவார்கள். இதனால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

click me!