18% GST | 18% ஜிஎஸ்டி யார் யாருக்கு? குழப்பத்தில் சுற்றும் மாணவர்கள்… தெளிவுபடுத்திய அண்ணா பல்கலைக்கழகம்!!

By Narendran SFirst Published Nov 25, 2021, 5:20 PM IST
Highlights

கல்வி சான்றிதழ்களுக்கான 18%  ஜிஎஸ்டி யார் யாருக்கு பொருந்தும் என்பது குறித்து குழப்பம் நிலவிய நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் தற்போது அதனை தெளிவுபடுத்தியுள்ளது. 

கல்வி சான்றிதழ்களுக்கான 18%  ஜிஎஸ்டி யார் யாருக்கு பொருந்தும் என்பது குறித்து குழப்பம் நிலவிய நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் தற்போது அதனை தெளிவுபடுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் வரும் இணைப்பு கல்லூரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது. அதில் சான்றிதழ்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், சான்றிதழ்கள் தொலைந்து போனால் மாற்று சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிப்பது,   விடைத்தாள்களின் நகல் பெறுவதற்கு போன்ற 16 சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பு கொண்டு வரப்படுவதாக அண்ணாப் பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்திருந்தது.

அதே வேளையில் தேர்வு கட்டணம், மறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணம், புரோவிஷனல் சான்றிதழ், டிகிரி சான்றிதழ், ரேங்க் சான்றிதழ், மறு ஆய்வு கட்டணம் போன்ற சேவைகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிர்வாக ரீதியான சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிப்படும் என்று பல்கலைக்கழகம் தரப்பில் சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் சான்றிதழுக்கான 18% ஜிஎஸ்டி வரி மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் தலையில் விழாதவாறு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் கல்வி சான்றிதழ்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி யார் யாருக்கு பொருந்தும் என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. இதுக்குறித்து பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர்கள் கல்வி ஆண்டு பயிலும் நேரத்தில் எந்த ஜி.எஸ்.டி.யும் இல்லை என்றும் மாணவர்களாக கல்வி ஆண்டு முடித்து வெளியே சென்ற பிறகு சில சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே ஜி.எஸ்.டி வரியை வசூலிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இடமாற்றம் சான்றிதழ், நகல் சான்றிதழ், வேலைக்கு செல்ல சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே 18 சதவீதம் ஜி.எஸ்.டி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இது ஒராண்டுக்கு தோராயமாக 20 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்கின்றனர் என்றும் அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் அவர் விளக்கம் அளித்தார். பெரும்பாலும் நிறுவனத்திற்கு வேலைக்கு விண்ணப்பம் செய்வது, வெளிநாட்டில் பணிக்கு செல்பவர்கள் விண்ணப்பம் செய்வார்கள் இணையதளத்திலும் இந்த தகவல் முறையாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய வேல்ராஜ், கல்வி ஆண்டில் பயிலும் எந்த மாணவர்களுக்கும் இதில் பாதிப்பு இருக்காது என்றும் 4 ஆண்டுகள் ஜி.எஸ்.டி வசூலிக்காததால் பல்கலைக்கழகத்திற்கும் சிரமம் ஏற்பட்டதாகவும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

click me!