அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு 40 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தம்பதி !! குவியும் பாராட்டு !!

By Selvanayagam PFirst Published Oct 14, 2018, 7:41 AM IST
Highlights

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்திற்கு, எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள, 40 ஏக்கர் நிலத்தை, தானமாக வழங்கிய ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியின் செயல், பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

சென்னை அடையாரில் உள்ள அடையாறு கேன்சர் மையம், புற்று நோய்க்கு சிறந்த சிகிச்சை அளித்து வருகிறது. டாக்டர் சாரதா இந்த மருத்துவமனையை நடத்தி வருகிறார். இந்தியா முழுவதிலும் இருந்து இங்கு கேன்சர் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக இங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆந்திர மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர், கே.வி.சுப்பாராவ், அவரது மனைவி பிரமிளா ராணி,. இவர்களுக்கு சொந்தமான, 40 ஏக்கர் நிலம், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே, சூரப்பூண்டி கிராமத்தில் உள்ளது.

அந்த நிலத்தை, அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்திற்கு, பத்திரப் பதிவு செய்து, தானமாக நேற்று வழங்கினர். தற்போதைய சந்தை மதிப்பு படி, அந்த நிலத்தின் மதிப்பு, எட்டு கோடி ரூபாய்.

நிலத்தை தானமாக வழங்கிய சுப்பாராவ் , என் தந்தை கிருஷ்ணய்யா, 1974ல், புற்றுநோயால் இறந்தார். அந்த சமயத்தில், புற்றுநோய்க்கு போதிய மருத்துவ சிகிச்சை வசதி இல்லை. அப்போது அரிதாக இருந்த, புற்றுநோய், தற்போது பரவலாக காணப்படுகிறது.

அடையாறு புற்றுநோய் மையம், மனிதாபிமான அடிப்படையில், நோயாளிகளுக்கு உயரிய சிகிச்சையை சிகிச்சையை, சேவையாக வழங்கி வருகிறது. அந்த மையத்திற்கு, எங்களால் முயன்ற உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், 40 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளோம். இவ்வாறு, சுப்பாராவ் தெரிவித்தார்.

உடன் பிறந்தவருக்கு கூட, 1 அடி இடத்தை விட்டு கொடுக்க மறுக்கும், சுயநலம் மிக்கவர்கள் வாழும் இந்த கால கட்டத்தில், எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள, 40 ஏக்கர் நிலத்தை, தானமாக வழங்கிய தம்பதியை பலரும் பாராட்டினர்.

click me!