நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான், 'இந்திய ஜனநாயக புலிகள்' கட்சியையும் காங்கிரஸ் உடன் இணைத்து அதன் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சர்ச்சையும் மன்சூர் அலிகானும்
பிரபல நடிகர் மன்சூர் அலிகான் கேப்டன் பிரபாகரன் என்ற திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இவரது நடிப்பால் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி மிகப்பெரிய நடிகராக உருவெடுத்தார். அதே நேரத்தில் பல சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரராக நடிகர் மன்சூர் அலிகான் உள்ளார். அவர் மீதான பாலியல் புகார் உள்ளிட்ட வழக்குகள் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை திரிஷா, ரோஜா தொடர்பாக சர்ச்சையாக பேசி மாட்டிக்கொண்டார். இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டார். பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வீதி, வீதியாக தேர்தல் பணியாற்றினார்.
காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம்
பிரச்சாரம் முடிவடைவதற்கு முதல் நாள் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். தனக்கு குளிர்பானத்தில் யாரோ விஷத்தை கலந்து கொடுத்ததாக தெரிவித்து இருந்தார். இந்தநிலையில், மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இன்று காலை காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து தனது விருப்பத்தை கடிதம் மூலம் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான கடிதம் கொடுத்துள்ளேன். முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன் மீண்டும் தாய் கழகத்தில் இணைய உள்ளேன்.
மோடியை கைது செய்யனும்
இதன் மூலம் தனது 'இந்திய ஜனநாயக புலிகள்' கட்சியையும் காங்கிரஸ் உடன் இணைத்து அதன் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும் கூறினார். பிரதமர் மோடி விஷப்பாம்பை விட மோசமாக உள்ளார். தேசத்தில் பிளவு ஏற்படுத்தி மதக்கலவத்தை ஏற்படுத்துகிறார். குஜராத்,மணிப்பூர் போல் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் கூறினார். தேர்தல் ஆணையம் பொறுப்புள்ளதாக இருந்தால் பிரதமர் மோடியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இதன் பிறகு தான் தேர்தலை நடத்த வேண்டும்.